புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானின் தீவிரவாத குழுக்களின் முகாமாக இருந்த பால்கோட்டில் வான்வழி தாக்குதல் நடத்தியது இந்திய விமானப்படை. அப்போது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் சிக்கி இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தான் ராணுவத்திடம் மாட்டிக்கொண்டார். இதன்பின் நடந்த பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பிறகு அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதன்பின் நடந்த திரைமறைவு ரகசியங்களை இப்போது பாகிஸ்தான் எம்பி ஒருவர் வெளியிட்டுள்ளார். பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி எம்பி அயாஸ் சாதிக் இது தொடர்பாக பேசும்போது, ``பிரதமர் இம்ரான் கான் அபிநந்தனை ``சமாதானத்தின் சைகை" என்ற கொள்கையில் விடுவித்தார். இதில் உள்ள உண்மை அப்போது இம்ரான் கானுக்கு அதை தவிர வேறு வழியில்லை. அபிநந்தனை விடுவித்த ஆக வேண்டிய கட்டாயத்தில் இம்ரான் கான் இருந்தார்.
அபிநந்தன் பிடிபட்ட உடனே நாடாளுமன்றத் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி தலைமையில் நடந்த கூட்டத்தில் இம்ரான் கான் பங்கேற்கவில்லை. அந்தக் கூட்டத்தில் குரேஷி நாடாளுமன்றத் தலைவர்களிடம் அபிநந்தனை விடுவிக்காவிட்டால், பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தப்போவதாக கூறினார். இந்த தகவலை கூறியதும், ராணுவத் தளபதி பாஜ்வாவின் கால்கள் நடுங்கின. அவருக்கு வியர்வை கொட்டியது. இதன்பின்னரே அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்.