அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி இன்று மாலை தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் பட்சத்தில் இப்படி திடீரென அரசாணை வெளி வந்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. நீதிமன்றம் இந்த விஷயத்தில் சற்று கடுமையாகவே நடந்து கொண்டதால் தான் இவ்வளவு அவசரம் அவசரமாக அரசாணை வெளியிட வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது என்கிறார்கள் சிலர். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக இன்று இது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் இந்த விஷயத்தில் அரசியலமைப்பு சட்டப்படி கவர்னர் நீதிமன்றத்திற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் மனசாட்சி படி முடிவு எடுக்க வேண்டும் என்றதும் நீதிமன்றத்தில் இருந்தவர்கள் கிடுகிடுத்துப் போயினர். சட்ட மசோதா சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் விரைவாக முடிவெடுக்க வேண்டும். பல கோணங்களில் ஆலோசிக்க மேலும் அவகாசம் தேவையா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தானே இணைந்து இந்த மசோதாவை உருவாக்கியிருக்கிறார்கள். இதில், கூடுதல் கால அவகாசம் கேட்பது விசித்திரமானது.
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி விட்ட சூழலில் விரைவாக முடிவெடுக்கப்பட வேண்டும் என்றனராம்.
அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர், " இது போன்ற முடிவுகளில், நீதிமன்றத்திற்கு ஆளுநர் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. எந்த ஒரு விவகாரத்திலும் முடிவெடுக்க போதுமான கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என விதிகள் உள்ளன என தெரிவித்திருக்கிறார். அதற்கு நீதிபதிகள்," அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு விரைவாக முடிவெடுக்க வேண்டும். ஆளுநருக்கு உத்தரவிடவோ, காலக்கெடுவை விதிக்கவோ இயலாது என்பது நீதிமன்றத்திற்கு தெரியும். ஆனால் ஏழை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொள்வதும் அவசியமானது என நீதிமன்றம் கருதுகிறது என்று சொல்லி இருக்கிறார்கள். அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர், ஆளுநர் இது குறித்து முடிவெடுக்க 3 முதல் 4 வார கால அவகாசம் தேவைப்படுவதாக சொல்லியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
மனுதாரர் தரப்பில், ஆஜரான வழக்கறிஞர் கர்நாடகாவில் இது போல அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது என்று வாதிட்டிருக்கிறார். அதற்கு நீதிபதிகள், அதனை உறுதி செய்து தகவல் தாருங்கள் என்று அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை பிற்பகலுக்கு ஒத்தி வைத்திருக்கின்றனர். பிற்பகல் மீண்டும் விசாரணை துவங்கியதும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கர்நாடகத்தில் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமே அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தனராம்.
மனுதாரர் தரப்பில் கர்நாடக மாநிலத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு 15 சதவீதமும் கன்னட மொழியில் பயிலும் மாணவர்களுக்கு 5 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்று சொல்லி இருக்கிறார். அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு இரண்டு மாதங்களுக்கு முன்பே சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, அக்டோபர் 16 ஆம் தேதி முடிவுகள் வெளியாகி விட்டது. தற்போது வரை கலந்தாய்வுகள் நடக்கவில்லை. 2017 முதல் 2020 வரை மொத்தமாக 14 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருடம் நீட் தேர்வில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என கேட்க, அரசு தரப்பில் 400 முதல் 500 மாணவர்கள் இந்த வருடம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.
பின் நீதிபதிகள் அரசு பள்ளி மாணவர்களின் உள்ஒதுக்கீடு இந்த வருடமே அமல்படுத்தப்பட்டால் 200 முதல் 300 மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்கும் என்று நீதிமன்றம் கருதுகிறது. சட்ட விதி 361 இன் படி ஆளுநருக்கு உத்தரவிடவோ, கேள்வி எழுப்பவோ நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. ஆனால் சட்ட விதி 200 ன் படி ஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்பின் கனவை மனதில்கொண்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும். அரசியலமைப்பு பொறுப்பில் உள்ளவர்கள் பதில் அளிக்கும் அளவிற்கு நடந்து கொள்ள மாட்டார்கள் என்னும் நம்பிக்கை காரணமாகவே இது போன்ற விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீடு குறித்து திங்கட்கிழமை நல்ல முடிவு எட்டப்படும் என நீதிமன்றம் நம்புகிறது என்று சொல்லி வழக்கை நவம்பர் 2-ஆம் ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இதன் பிறகு அவசரம் அவசரமாக அரசாணை தயார் செய்யப்பட்டு அலுவல் நேரத்திற்கு பின் வெளியிடப்பட்டிருக்கிறது என்கிறார்கள் அரசுத்தரப்பு பிரமுகர்கள்.