தர்காவுக்கு செல்லவிடாமல் பரூக் அப்துல்லாவுக்கு தடை.. கட்சி நிர்வாகிகள் குற்றச்சாட்டு.

by எஸ். எம். கணபதி, Oct 30, 2020, 16:17 PM IST

மீலாது நபியை ஒட்டி தர்காவுக்கு செல்ல முயன்ற பரூக் அப்துல்லாவை போலீசார் தடுத்து நிறுத்தி வீட்டிலேயே சிறை வைத்துள்ளதாக அவரது தேசிய மாநாட்டு கட்சி குற்றம்சாட்டியுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. மேலும், அம்மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், வன்முறைச் சம்பவங்கள் வெடிக்கலாம் என்ற அச்சத்தில் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள், இயக்கங்களின் தலைவர்கள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். இதன்பின்னர், பல மாதங்களுக்கு பிறகு ஒவ்வொரு தலைவராக விடுதலை செய்யப்பட்டனர்.

தற்போது தே.மா.கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ம.ஜ.க. தலைவர் மெகபூபா முப்தி உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் சேர்ந்து தனி கூட்டணி அமைத்தனர். காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும், காஷ்மீர் மக்களின் பழைய உரிமைகளை மீட்டெடுப்பது என்றும் தீர்மானித்தனர். இதற்கு பின்னர், பரூக் அப்துல்லா மீதுள்ள பழைய கிரிக்கெட் சங்க ஊழல் வழக்கில் அவரிடம் 4 மணி நேரம் அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்தினர். உடனே, மத்திய அரசு அவரை பழிவாங்குவதாக மெகபூபா குற்றம்சாட்டினார். இந்த சூழ்நிலையில், பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவு போடப்பட்டது. அதில், இன்று மீலாது நபியை ஒட்டி, ஹஸ்ரத்பால் தர்காவுக்கு புறப்பட்ட பரூக் அப்துல்லாவை வெளியே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி, வீட்டிலேயே இருக்க வைத்து விட்டனர். மீலாது நபி தினத்தில் அவரது அடிப்படை உரிமையைப் பறிக்கும் வகையில் செயல்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறப்பட்டுள்ளது.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை