போன் நம்பரை கொடுத்து போலீசிடம் வசமாக சிக்கிய திருடன்

by Nishanth, Oct 31, 2020, 11:09 AM IST

ரயில் பயணத்தின்போது பழக்கமான பெண்ணிடம் தன்னுடைய செல்போன் நம்பரை கொடுத்த ஒரு ஆசாமி பின்னர் அவரிடமே ₹11,000 பணத்தை அபகரித்தான். ஆனால் அந்த ஆசாமியின் போதாத காலம், அந்த செல்போன் நம்பரை வைத்தே போலீசார் அந்த திருடனை மடக்கினர். கேரளாவில் இந்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.கடந்த 8 மாதங்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்தது. கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ண பிரியா.

இவர் கடந்த பிப்ரவரி மாதம் கோட்டயத்திலிருந்து பாலக்காட்டுக்கு ஒரு உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்றார். கோட்டயத்தில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் இவர் பயணம் செய்தார். அப்போது வழியில் ஒருவர் கிருஷ்ண பிரியா பயணம் செய்த பெட்டியில் ஏறினார். அவரிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்த அந்த நபர் தான், கேரள போலீசில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக இருப்பதாகக் கூறியுள்ளார். போலீஸ் என்றதும் கிருஷ்ண பிரியா மிகவும் நம்பிக்கையாகப் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த நபர் கிருஷ்ண பிரியாவிடம் தன்னுடைய செல்போன் நம்பரைக் கொடுத்து ஏதாவது அவசர உதவி தேவைப்பட்டால் தன்னை அழைக்குமாறு கூறியுள்ளார்.திருச்சூர் அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது, கிருஷ்ண பிரியா தனது பேக்கை சீட்டில் வைத்து விட்டு கழிப்பறைக்குச் சென்றார். அப்போது பேக்கை பார்த்துக் கொள்ளுமாறு கிருஷ்ணபிரியா அந்த நபரிடம் கூறினார். அந்த நபரும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார். கிருஷ்ண பிரியா கழிப்பறைக்குச் சென்றவுடன் அந்த ஆசாமி நைசாக பேக்கை திறந்து அதில் இருந்த 11 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டார். ரயில் திருச்சூரை அடைந்தவுடன் அந்த நபர் இறங்கிச் சென்று விட்டார். பாலக்காடு சென்ற பின்னர் பேக்கை திறந்து பார்த்த போது தான் ₹11,000 மாயமானது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ண பிரியா பணம் மாயமானது குறித்து பாலக்காடு ரயில்வே போலீசில் புகார் கொடுத்தார். ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.முதலில் ரயிலில் பழக்கமான நபர் மீது கிருஷ்ண பிரியாவுக்கு சந்தேகம் வரவில்லை. அவர் தன்னை சப்-இன்ஸ்பெக்டர் என்று கூறியது தான் அதற்குக் காரணமாகும். ஆனால் ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் தான் திருடியிருக்கலாம் எனச் சந்தேகம் ஏற்பட்டது. அதன் பின்னர் தான் அந்த நபர் செல்போன் நம்பரைக் கொடுத்த ஞாபகம் கிருஷ்ண பிரியாவுக்கு வந்தது. உடனடியாக அந்த நம்பரை அவர் போலீசாரிடம் கொடுத்தார்.

இதையடுத்து நடந்த விசாரணையில் அந்த நபர் சிக்கினார். விசாரணையில் அவர் இடுக்கியைச் சேர்ந்த சந்தோஷ் (44) எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த நபரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். தான் தோண்டிய குழியில் தானே சிக்கி விட்டோமே என எண்ணி சந்தோஷ் சிறையில் நாட்களைக் கழித்து வருகிறார்.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை