கிரெடிட் கார்டுகள் மூலம் வழங்கப்பட்ட கடன் நிலுவை தொகை ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியதால் வங்கிகள் திணறி வருகின்றன. நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் கிரெடிட் கார்டு கடன் வளர்ச்சி மூன்று சதவீத எதிர்மறை வளர்ச்சியினை பதிவு செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் நாட்டில் கிரெடிட் கார்டுகள் மூலம் வழங்கப்பட்ட கடன் மொத்த நிலுவைத் தொகை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாகக் கடந்த சில மாதங்களாக கிரெடிட் கார்டுகளை வழங்கும்போது, வங்கியாளர்கள் மிகவும் ஜாக்கிரதையாக உள்ளனர். கிரெடிட் கார்டுகள் மூலம் கடன் பெற்று இதுவரை சரியாகக் கடனை செலுத்திக் கொண்டிருந்தவர்கள் கூட, தற்போது கடனை திரும்பச் செலுத்துவதில் தாமதப்படுத்தி வருகின்றனர். கொரானா ஏற்படுத்திய தாக்கம் இதற்கு ஒரு காரணமாக இருந்தாலும் நிலுவைத் தொகை மிக அதிகம் என்கிறார்கள் வல்லுனர்கள் .
இந்தியாவின் முதல் கார்டு வழங்கும் நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் இதன் தாக்கம் இப்போதே தெரிய வந்துள்ளதாவும் ஒரு ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கடன் வழங்குனரான எஸ்பிஐ கார்டுகள் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் அதன் மொத்த வாரக்கடன் விகிதம் இரு மடங்காக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை மாதாந்திர தவணை செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டிருந்த போதும், மொத்த வாரக்கடன் விகிதம் அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் இருப்பது வங்கிகள் ஆபத்தில் உள்ளதைக் காட்டுகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் கிரெடிட் கார்டு வர்த்தகம் 3% எதிர்மறை வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 10 சதவீத வளர்ச்சியுடன் இருந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தனிநபர் கடன் மற்றும் கிரெடிட் கார்டு பிரிவில் வணிகம் அதிக வளர்ச்சி காணப்பட்டாலும், அதிக எண்ணிக்கையிலான வாரக்கடன் காரணமாக இந்த வளர்ச்சி வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது.
உலகப் பொருளாதாரத்தில் மந்த நிலை என்பது அதிக எண்ணிக்கையிலான வாரக்கடன் மதிப்பு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். எனினும் கடன் வளர்ச்சியும் அதிகரிக்கும் என்றும் பெரிய அளவிலான வாராக்கடன் விகிதம் இப்போதைக்கு அதிகம் வராது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். காரணம் பெரும்பாலான வங்கிகள் கடன் வாங்குபவர்களுக்கு இரண்டு ஆண்டு கடன் மறுசீரமைப்பை அனுமதித்துள்ளன. எஸ்பிஐ ஏற்கனவே இந்த திட்டத்தின் கீழ் கடனை மறுசீரமைப்புக்கு மாற்றியுள்ளது. கொரோனா தாக்கத்தின் காரணமாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் வாரக்கடன் மதிப்பும் சற்று அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்ப்பு உள்ளது.