ஜெயிலுக்கு போகும் ஆரி , கொளுத்திப் போட்ட பாலா - பிக் பாஸில் என்ன நடந்தது ? நாள் 27

by Mahadevan CM, Oct 31, 2020, 16:29 PM IST

வேர் இஸ் தி பார்ட்டி பாடலை காலை தேசிய கீதமாக போட்டவங்களை கும்பிடனும்யா. சென்னையில் ஒரு மழைக்காலம் என்பதால் எல்லாரும் கிடைச்ச இடத்துல ஆடிட்டு இருக்க, என் வழி தனி வழினு சொல்லிட்டு ஷிவானி குடையோட லைட் மூவ்மெண்ட் கொடுத்துட்டு இருந்தாங்க.

அனிதாவுக்கு நேர்ந்த கொடுமையை தட்டிகேட்டே ஆகனும்னு சனம் துடியா துடிச்சுட்டு இருந்ததை பார்த்த உடனே அனிதாக்குள்ள ஏதோ பல்பு எறிஞ்சுருக்கும் போலருக்கு. எல்லாரும் செஞ்சதை தான் நானும் செஞ்சேன்னு அடக்கி வாசிச்சுட்டு இருந்தாங்க. (இந்த பொண்ணுக்குள்ளேயும் ஏதோ இருந்திருக்கு பாரேன்) எல்லாரும் 2 நிமிஷம் பேசிருக்க அம்மணி மட்டும் 5 நிமிஷம் பேசிருக்கு. அப்பவும் சனம் அடங்கவே இல்லை. பக்கத்துல சோம் ஆழ்நிலை தியானத்தையும், யோகாவையும் கலந்து ஒன்னு செஞ்சுட்டு இருந்தாப்ல. "கைப்புள்ள எப்டியாவது தப்பிச்சு ஓடிர்ரா" அப்படி ஒரு மைண்ட் வாய்ஸ் உங்களுக்கு சத்தமா கேட்ருந்தா, சந்தேகமே வேணாம். அது நம்ம சோம் குரல் தான். பயபுள்ள கண்ணை திறந்தா மரணபீதி வெளிய தெரிஞ்சுடும்னு, கண்ணை மூடிட்டு யோகா பண்றான்.

சனம் பேசிட்டு இருக்கறதை வெளிய வந்து பார்த்த சம்மு, உள்ள போய் எல்லார்கிட்டயும் சொல்றாங்க.

இந்த வாரத்துக்கான பெஸ்ட் வொர்ஸ்ட் பர்பாமர் தேர்ம்தெடுக்கும் நேரம் வந்தது. பெஸ்ட் பர்பாமருக்கு பாலா, நிஷா செலக்ட் ஆனாங்க. வாரம் முழுவதும் நல்லா வேலை செஞ்சதுக்கு நிறைய பேர் நாமினேட் ஆனாலும் சோம் தேர்வானார். வொர்ஸ்ட் பர்பாமர் வரும்போது, மட்டும் எல்லாரும் தனித்தனியா நாமினேட் செய்ய சொன்னது போங்காட்டம். தனித்தனியா செய்யும் போது தான் நம்மாளுகளோட கும்பல் மனப்பான்மை வெளிய வந்துருமே. உண்மையிலேயே இந்த முடிவெல்லாம் யார் எடுக்கறாங்கனு தெரியல. கேப்டன் தான் எடுக்கறாங்கன்னா, பெஸ்ட் பர்பாமன்ஸ் செலக்ட் செய்யும் போது, எந்த காரணமும் இல்லாம ஒருத்தர் நாமினேட் ஆகறாங்க. ஆனா வொர்ஸ்ட் பர்பாமர் வரும் போது மட்டும் ஓபன் நாமினேஷன் + காரணமும் வருது. உள்ள இருக்கற ஹவுஸ்மேட்ஸ் இதை தான் தட்டி கேக்கனும்.

ஆனா யாருமே தட்டி கேட்க முடியாதபடி வேகமா சில விஷயங்கள் நடக்குது. அல்லது நடத்தப்படுது. அதுல தான் சில பேர் பலியாடுகள் ஆகறாங்க. ஆரி சொல்ல வந்ததும் அதுதான்.இந்த வாரம் முழுவதும் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவர்கள் என்று வரும்போது, எத்தனை டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டதோ அத்தனை நாமினேஷன் வரனும். அப்போது தான் சிறந்தவர் யாரென்று சரியாக தேர்ந்தெடுக்க முடியும். ஒரு டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவர் இன்னொரு டாஸ்க்கில் மோசமாக செயல்பட்டிருக்கலாம். இதெல்லாம் கணக்குல வரனும். ஆனா இங்க அது நடக்கறதே இல்லை.

அதே மாதிரி மோசமாக செயல்பட்டவர்களுக்கும். விஜயதசமி கொண்டாட்டத்துல அனிதா ஹோஸ்ட் செஞ்சது சரியில்லைனு அனிதா நாமினேட் ஆகறாங்க. சரியான காரணம். நாம ஒத்துக்கலாம். அந்த டாஸ்க்ல ரமேஷ் பங்களிப்பு என்ன? சோம் பங்களிப்பு என்ன? சோம் கூட பிக்பாஸ் நிகழ்ச்சியை ஸ்பூப் செஞ்ச போது பங்கெடுத்தார். ஆனா ரமேஷ்? எந்த ஒரு இடத்திலேயும் அவரை பார்க்கலை. ஆனா ரமேஷ் நாமினேட் ஆகவே இல்லை. தங்கவேட்டை டாஸ்க்ல பர்பாமன்ஸ் தான் அளவீடா இருக்கனும். யார் அதிக தங்கம் எடுத்தாங்களோ அவங்க தான் பெஸ்ட் பர்பாமர், சோ பாலா பேர் சொன்னது நியாயமான விஷயம். அப்ப குறைவான தங்கம் எடுத்தவங்க தானே மோசமான பர்பாமர். அந்த பேர் வரவே இல்லை.

அடுத்தது அதிகாரம் டாஸ்க்ல, ரமேஷோட பங்களிப்பு என்ன? ஆரிக்கு ஏதோ டாஸ்க் கொடுத்ததாகவும், ஆரி அதை செய்யாததால அவரை நாமினேட் செய்யறேன்னு சம்மு சொன்னது நியாயமான காரணம். அதே அளவுகோல் மத்தவங்களுக்கு பார்க்கப்படலைங்கறது தான் என் குற்றச்சாட்டு.இதை பிக்பாஸ் கேக்கமாட்டாரு. வீட்ல இருக்கறவங்க தான் புத்திசாலித்தனமா செயல்பட்டிருக்கனும். இந்த வாரத்தை பொறுத்தவரைக்கும் ஆரி + அனிதாவோட தேர்வு நியாயமானது தான். நான் இங்க குறை சொல்றது தேர்ந்தெடுக்கும் முறைகள் பத்தி.

அனிதா தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஏத்துகிட்டாலும் ஆரியால ஏத்துக்க முடியலை. அதுவும் தொடர்ந்து ரெண்டாவது வாரம். நான் மேல சொன்ன மாதிரி தேர்ந்தெடுக்கும் முறை பத்தி தான் ஆரி பேசினாரு. ஆனா அவரோட கருத்து ஷார்ப்பா இல்லாததால, அவர் ஸ்கோர் செய்ய வேண்டிய இடத்துல கோட்டை விட்டுட்டாருனு தான் சொல்லனும். குரூப்பிசம், பேவரடிசம்னு எந்த ஆதாரமும் இல்லாம சொல்லி, யாரையும் குற்றம் சாட்டாம, அவர் பேசினது எடுபடலைனு தான் சொல்லனும்.

பாலாவும் இதை தான் பேசினாலும், அவர் நேரடியா எதிர்த்தது ரியோவை. அங்க முகம் தெரியக்கூடிய ஒரு எதிரி இருந்தார். ஆனா பொத்தாம் பொதுவா ஆரி பேசினதை யாரும் ரசிக்கலை. ஆரியோட கோபம் கையாலாகத்தனத்தின் வெளிப்பாடு. அவர் சரியா செஞ்சிட்டு பேசிருந்தா ஓக்கே.

அதே மாதிரி அனிதா சம்பந்தமா ஏதோ பேசனும்னு ஆரி சொன்னபோது, அனிதாவே வேண்டாம்னு சொல்லிட்டாங்க. (இந்த பொண்ணுக்குள்ளேயும் ஏதோ இருந்திருக்கு பாரேன்).

ஆரியை பொறுத்தவரைக்கும் இந்த வீட்டுக்குள்ள தானும் ஒரு டிசைடிங் பேக்டரா இருக்கனும்னு ஆசைப்படறாரு. பாலா, அர்ச்சனா, ரியோ மாதிரி தன் குரலும் கேக்கப்படனும்னு நினைக்கறாரு. ஆனா அதுக்காக அவர் எடுத்து வைக்கற ஒவ்வொரு அடியும் தப்பா இருக்கு. தன்னை ஒரு பர்பெக்ட் பர்சனாவும், மத்தவங்களை குறையுள்ள மனிதர்களாகவும் தொடர்ந்து காட்டிட்டே இருக்காரு. இவங்களுக்கு புத்தி சொல்லி காப்பாத்தறது தன்னோட வேலைங்கற அந்த அட்டிட்டியூட் தான் பெரும் பிரச்சினை.

அதே மாதிரி மத்தவங்களுக்காகனு பொத்தாம் பொதுவா பேசினா யாரோட ஆதரவும் கிடைக்காது. போன தடவை ஆஜித்தும், ரமேஷும் போன போது இவருக்கு குரூப்பிசம் தெரியல, பேவரட்டிசம் தெரியல. அப்பவே ஆரி குரல் கொடுத்திருந்தா அவர் ஹீரோ ஆகிருக்கலாம். ஆனா தனக்கு வந்த போது மட்டும் கத்தினா யாரும் கேக்க மாட்டாங்க.

போன சீசன்ல வந்த சேரனை இவர் முன்னுதாரணமா எடுத்துக்கலாம். சேரனும் தொடர்ந்து மோசமான பர்பாமரா நாமினேட் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். அதுக்கப்புறம் அவர் டாஸ்க், வேலைகள் எல்லாத்திலும் நல்ல பர்பாமன்ஸ் கொடுத்தார், "எனக்கு ஏன் பெஸ்ட் பர்பாமன்ஸ் கொடுக்கலைனு அதுக்கப்புறம் தான் கேட்டார். அப்ப அவர் கேட்ட கேள்வில நியாயம் இருந்தது. மக்கள் ஆதரவு அவருக்கு கிடைச்சது. ஆனா ஆரி செய்யறது தோத்துப்போன கடுப்புல செய்யறா மாதிரி இருக்கு.

போன தடவை மாதிரி இந்த முறையும் ஜெயிலுக்குள்ள போறதுக்கு முன்னாடி ஒரு உரை ஆத்திட்டு தான் போனாரு ஆரி. அவர் பேசி முடிச்சதுக்கு அப்புறமா, சரி சரி உள்ள போனு பொடனில அடிச்சு உள்ள தள்ளி பூட்டினாங்க அர்ச்சனா. (எனக்கு அப்படி தாம்பா தெரிஞ்சுது).

ஆரியை ஜெயிலுக்கு அனுப்பிட்டு உள்ள போன அர்ச்சனா, சுரேஷ் கிட்ட புலம்பிட்டு இருந்தாங்க. சமைக்கறது, சாப்பிடறதுக்கெல்லாம் கணக்கு கேக்கறாரு ஆரினு, சுரேஷ் கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க. அந்த மாதிரி எந்த இடத்துல, எந்த நேரத்துல சொன்னாருனு தெரியல. ஆனா ஆரி எங்கேயோ பேசினது அர்ச்சனா காதுக்கு வர அளவுக்கு அங்க அவங்களுக்கு அதிகாரம் இருக்கு. இந்த விஷயத்தை சொல்லும் போது சுரேஷ் காட்டின ரியாக்சன் அக்மார்க் கொளுத்தி போடும் ரகம்.

இது பத்தாதுனு அங்க வந்த பாலா இன்னொரு விஷயத்தையும் கொளுத்தி போட்டாரு. முன்னொரு காலத்துல சப்பாத்தி செஞ்சுருக்கும் போது, ஆளுக்கு ரெண்டு தான்னு சொல்லிருக்காங்க. ஆரி ரெண்டு மட்டும் எடுக்க, அங்க வந்த ரியோ, மூணாவதா ஒரு சப்பாத்தி எடுத்ததாகவும், அதுக்கு அர்ச்சனா " அப்புறமா எடுத்துக்கலாம்"னு கண்ணை காட்டினதாகவும் பாலா கிட்ட சொல்லிருக்காரு ஆரி. அதை அப்படியே அர்ச்சனா கிட்ட சொல்லி எரியற நெருப்புல இன்னும் கொஞ்சம் பெட்ரோலை ஊத்தினாரு. இது வேணும்னே செஞ்சது போல தான் இருந்தது. ஏன்னா அர்ச்சனா அந்த பக்கம் போனதுக்கு அப்புறம், ஆரி சொன்னதுல தப்பில்லை. முதல்ல எனக்கும் அப்படித்தான் தோணுச்சுநு பாலா சொல்றாரு.

நான் உடனே ஆரி கிட்ட பேசப்போறேன்னு கிளம்பினாங்க ராஜமாதா.காலையில பொங்கல் பரிமாறும் போது ஆஜித் தட்டுல கொஞ்சம் பொங்கல் வச்சுட்டு, போதுமா, இன்னும் கொஞ்சம் வக்கனுமானு கேட்ருக்காரு ஆரி, (இது நமக்கு காட்டப்படுது). அப்ப பக்கத்துல இருந்து சூப்பர்வைஸ் பண்ணிட்டு இருந்த அர்ச்சனா, ஆரி கிட்ட இருந்து பரிமாறும் பொறுப்பை வாங்கிக்கறாங்க. இது ஒரு பிரச்சனை. ஆரி கேட்டதுல எந்த தப்பும் கிடையாது. வீட்டுக்கு வீடு பரிமாறும் முறைல மாற்றங்கள் இருக்கும். எங்க வீட்டுல கேட்டு தான் போடுவாங்க. நண்பர்கள் வீட்டுல சாப்பிடப் போனா அள்ளி அள்ளி போடுவாங்க. நாம தான் தட்டுக்கு மேல படுத்து தடுக்கனும். இதை தப்புனு சொல்லவே முடியாது. ஆரி செஞ்சது அவரோட வீட்டு பழக்கம். அதுல எந்த கௌரவக் குறைவுமில்லை. உணவு வீணாகக் கூடாதுங்கற எண்ணம் முக்கியமானது தான்.

ஆனா அர்ச்சனா அதை ஒரு குற்றச்சாட்டா சொன்னது தப்பு தான்.அதுக்காக ஆரி கிட்ட இருந்து அந்த வேலையை பறிச்சது தவறு. போன வாரமே அர்ச்சனா மேல இதே குற்றச்சாட்டை வச்சாரு ஆரி. அடுத்தவங்க வேலையும் இழுத்து போட்டு செய்யறாங்கனு சொன்னது நினைவிருக்கலாம்.

சமையல், சப்பாத்தி, வேலை, பரிமாறுதல் இதை பத்தி விவாதம் இழுத்துட்டே போச்சு. ஆரி முன்வைத்த பாயிண்ட்ஸ்ல எந்த தவறும் இல்லை. ஆனா அது அர்ச்சனாக்கு பிடிக்கலை. ஆரி பாயிண்ட்டா பேசற ஒவ்வொரு தடவையும் அதுக்கு நேரடியான பதில் சொல்லலை. பேச்சு மறுபடியும் குரூப்பிசம் பத்தி போகும் போது அங்க வந்த பாலாவையும் தூக்கி உள்ள போட்டாரு ஆரி. பாலா வேலை செய்ய மாட்டேன்னு சொன்னது, கேப்டன் பேச்சை கேக்க மாட்டேன்னு சொன்னது எல்லாத்தையும் டிஸ்கஸ் செய்யனும் இல்லனு ஆரி கேட்டது நியாயமான கருத்து.

இந்த விவாதத்துல இருந்து அர்ச்சனாவை உள்ள கூட்டிட்டு போறாரு ரியோ. அப்போ ஏதோ கெட்ட வார்த்தைல திட்டிட்டே போறாங்க. நிஷாவை பார்த்து இனி அந்த பக்கமே போகாதேனு சொல்லிட்டு இருந்தாங்க. தனிப்பட்ட ஒருத்தரோட விவாதம் வந்த காரணத்துக்கு இனிமே கிச்சன் பக்கம் போனா என்னை செருப்பால அடிங்க சொல்றதெல்லாம் ஓவர்ங்க அர்ச்சனா. இதை அர்ச்சனா சொல்றது ரெண்டாவது தடவை.

வெளிய அனிதாவும் ஆரியும் அர்ச்சனாவோட அதிகாரத்தை பத்தி பேசிட்டு இருக்காங்க. அப்ப அனிதா சொன்ன ஒரு மேட்டர் முக்கியமானது. இந்த வீட்டுல ரியோ தனிச்சு தெரிஞ்சுட்டு இருந்தாரு. அவ்வளவு முக்கியத்துவம் இருந்தது. ஆனா அர்ச்சனாவோட சேர்ந்து இப்ப இருக்கற இடமே தெரியலைனு சொன்னது அக்மார்க் உண்மை. (இந்த பொண்ணுக்குள்ளேயும் ஏதோ இருந்திருக்கு பாரேன்).

அடுத்து பிரிஸ்மா இன்னர்வேர்ஸ் வழங்கும் பேஷன் ஷோ நடந்தது. இனி தீபாவளி வரைக்கும் இவங்களை கையில பிடிக்க முடியாது. எல்லாருக்கும் புது ட்ரெஸ் கிடைச்சுது. பேஷன் ஷோ முடிஞ்சு வீட்டுக்குள்ள போனதுக்கு அப்புறமும் ஒரு கிப்ட் பாக்ஸ் எல்லாருக்கும் கிடைச்சது. அதுக்கடுத்து ட்ரெண்ட்ஸ் நிறுவனம் வழங்கிய கிப்ட்.

அடுத்து தலைவர் போட்டி. ரம்யா நம்பர் ஒன்னா வந்தாங்க இல்லையா, அதுக்காக அவங்களுக்கு ஒரு சிறப்புச் சலுகை கொடுத்து தலைவர் பதவிக்கான போட்டில இருந்து நிஷாவுக்கு பதிலா சம்முவை மாத்திட்டாங்க.

மத்த ஹவுஸ்மேட்ஸ் பந்துகளை எறிய அதை இவங்க கலக்ட் செய்யனும். தான் கலெக்ட் செஞ்ச பந்துகளையும் சம்முவோட கூடைல போட்டு சம்முவை கேப்டன் ஆக்கறாரு பாலா.ஏற்கனவே ரியோவை கேப்டன் ஆக்கினதே நான் தான்னு சொல்லிக்கற பாலாவுக்கு கிங்மேக்கரா இருக்க ஆசை போலருக்கு.

எனக்கு கேப்டன் ஆக இன்னும் நேரம் இருக்கு. யார் பக்கமும் சாயாதவங்க, யாராலையும் இன்புளையன்ஸ் செய்ய முடியாதவங்க தான் கேப்டன் ஆகனும்னு ஆரிகிட்ட விளக்கம் கொடுத்த பாலாவை பார்த்து வியப்பு வந்தது உண்மை தான்.

ஆண்டவர் என்ன சொல்றாருனு பார்ப்போம்.

You'r reading ஜெயிலுக்கு போகும் ஆரி , கொளுத்திப் போட்ட பாலா - பிக் பாஸில் என்ன நடந்தது ? நாள் 27 Originally posted on The Subeditor Tamil

More Bigg boss News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை