திணறியது திருப்பதி இலவச தரிசன டோக்கன் வாங்க குவிந்த பக்தர்கள்

திருப்பதி கோவில் தரிசனத்திற்காக இலவச தரிசன டிக்கெட்டுகளை பல பக்தர்கள் முண்டியடித்ததால் திருப்பதி நகரமே திணறியது. நாளொன்றுக்கு 3000 டோக்கன்கள் மட்டுமே கொடுக்கப்படுவதால் டோக்கன் கிடைக்காத பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

by Balaji, Oct 31, 2020, 15:29 PM IST

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யத் திங்கட்கிழமை முதல் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பதி மலை அடிவாரத்தில் அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் மையத்தில் உள்ள கவுண்டர்களில் இந்த இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. தினந்தோறும் 3 ஆயிரம் டிக்கெட்கள் எனக் காலை 6 மணி முதல் டிக்கெட் உள்ள வரை வழங்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு இதே போல் தினமும் 3 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டபோது அதை வாங்குவதற்கு ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர். காலை 6 மணிக்கு கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டு டிக்கெட் வழங்ககூடிய நிலையில் முதல் நாள் இரவே பக்தர்கள் வந்து கவுண்டர்கள் முன்பு காத்திருந்தனர்.

இதனால் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு அதிகம் ஏற்படும் என்பதால் இலவச தரிசன டோக்கன் வழங்குவதைத் தேவஸ்தானம் அப்போதைக்கு நிறுத்தி வைத்தது. தற்போது மீண்டும் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வரும் நிலையில் டிக்கெட் வாங்க ஏராளமான பக்தர்கள் ஒருநாள் முன்னதாகவே கவுண்டர்கள் முன்பு குவிந்து வருகின்றனர்.சமூக இடைவெளி இல்லாமல் நிற்பதால் கொரோனா பரவல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரூ 300 ரூபாய் டிக்கெட் மூலம் நாள் ஒன்றுக்கு 16 ஆயிரம் பக்தர்களுக்கு என ஆன்லைனில் டிக்கெட் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஏழுமலையானை தரிசிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இலவச தரிசன டோக்கன்கள் வாங்க பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் திருப்பதி வருகின்றனர். ஆனால் 3 ஆயிரம் பேருக்கு மட்டுமே தினமும் டோக்கன்கள் வழங்கப்படுகிறது. டிக்கெட்கள் அனைத்தும் வழங்கப்பட்டு விட்டால் மற்ற பக்தர்கள் வரிசையில் நின்றாலும் டிக்கெட் கிடைக்காமல் ஊர் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இன்று இப்படி டிக்கெட் கிடைக்காத பலரும் ஆவேசமடைந்து தேவஸ்தான ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் போலீசார் தலையிட்டு அவர்களைக் கலைந்து போகச் செய்தனர். எனினும் பலர் அங்கேயே அமர்ந்து மறுநாள் டிக்கெட்டை பெற்று தரிசனம் செய்துவிட்டுத் தான் செல்வோம் என்று விடாப்பிடியாகக் காத்திருக்கின்றனர்

இப்படி மறுநாள் டிக்கெட் பெறப் பக்தர்கள் கவுண்டர் முன் திரண்டு காத்திருப்பதால் கொரானா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்த என்ன செய்வது எனத் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.எனவே இலவச தரிசன டோக்கன்களையும் ஆன்லைன் மூலம் விநியோகம் செய்தால் மட்டுமே இந்த பிரச்சினைகளுக்கு உரியத் தீர்வு காண முடியும் என்பது பக்தர்களின் கருத்து

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்