புதுவை காவலர் தேர்வு குறித்து புகார்கள் பறந்தன : தேர்வை நிறுத்தி வைத்து கவர்னர் அதிரடி

by Balaji, Oct 31, 2020, 17:15 PM IST

புதுவையில் காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு நடக்க இருந்த நிலையில் திடீரென்று அதை நிறுத்தி வைத்து கவர்னர் கிரண்பேடி உத்ததிர்விட்டுள்ளார். புதுவை காவல்துறையில் . கடந்த 2018-ம் ஆண்டு காலியாக உள்ள 390 காவலர்கள், 12 ரேடியோ டெக்னீசியன்கள், 29 டெக் ஹேலண்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களில் சேர விரும்பி ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். பல்வேறு காரணங்களால் இதில் ஏராளமான விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில் பல ஆண்டுகளாக போலீஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு நடக்காததால் வயது வரம்பில் 2 ஆண்டுகள் சலுகை வழங்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.இதைத்தொடர்ந்து அவ்வாறு வயது வரம்பு சலுகை அளிக்கப் புதுவை அரசு முடிவெடுத்து கவர்னர் கிரண்பேடிக்கு கோப்புகளை அனுப்பியது. ஆனால் அதற்கு கவர்னர் அனுமதி அளிக்க மறுத்து விட்டார். இதையடுத்து வயது வரம்பில் தளர்வு அளிக்கக் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு அதன் பின்னரே தளர்வு அளித்து உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான உடல் தகுதி தேர்வு வருகிற 4-ந்தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த உடல்தகுதி தேர்வில் ஓட்டம் நடக்கும்போது நேரத்தைத் துல்லியமாக கண்டறிய மைக்ரோ சிப் பொருத்தும் முறைக்குப் பதிலாக விசில் முறை அமல்படுத்தப்பட உள்ளதாக கவர்னர் கிரண் பேடிக்கு புகார்கள் சென்றன. இந்த இது குறித்து பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து காவலர் தேர்வினை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அரசு தலைமைச் செயலாளருக்கு கவர்னர் கிரண் பேடி அனுப்பிய குறிப்பாணையில் உடல் தகுதித் தேர்வின்போது டிஜிட்டல் முறைக்குப் பதிலாக வேறுமுறையைப் பயன்படுத்துவது, உள்ளிட்ட பல்வேறு புகார்கள் வந்துள்ளன. தேர்வு முறைகள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடக்க ஏற்கனவே வெளியிடப்பட்ட விதிமுறை, நிலையாணை ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும். அதில் மாற்றங்களை ஏற்படுத்துவது பிரச்சினைகளை ஏற்படுத்தி கோர்ட்டுக்கு சென்றுவிடும். எனவே உரிய அதிகாரம் பெற்றவர் முடிவு எடுக்கும்வரை காவலர் பணிக்கான தேர்வுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

You'r reading புதுவை காவலர் தேர்வு குறித்து புகார்கள் பறந்தன : தேர்வை நிறுத்தி வைத்து கவர்னர் அதிரடி Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை