ஊழலிலும், சொத்துக்களை குவிப்பதிலும் பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவை கேரள முதல்வர் பினராயி விஜயன் முந்திவிட்டார் என்று கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். தங்க கடத்தல் வழக்கில் கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி காங்கிரஸ், பாஜக உட்பட எதிர்க்கட்சியினர் கடந்த சில தினங்களாக கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே கேரள சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கொடியேறி போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டது கேரள அரசியலில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து எதிர்க்கட்சிகளின் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.
நேற்று கேரளா முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாஜக சார்பில் தொடர் போராட்டம் நடந்தது. திருவனந்தபுரத்தில் நடந்த போராட்டத்தை கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது: கேரள முதல்வர் பினராயி விஜயன் பெரும் ஊழல்வாதியாக மாறிவிட்டார். ஊழல் செய்வதில் அவர் பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதல் இடத்திற்கு வந்துவிட்டார். ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி, தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரை விட பெரும் பணக்காரர் ஆகிவிட்டார். கேரளாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் பினராயி விஜயன் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். கடந்த நான்கரை வருடங்களில் கேரளாவில் செயல்படுத்தப்பட்டுள்ள அனைத்து முக்கிய திட்டங்களிலும் ஊழல் நடந்துள்ளது.
இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். பினராயி விஜயன் மட்டுமில்லாமல் கேரள மாநில சிபிஎம் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனும் ஊழல் செய்துள்ளார். அவரது மகன்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர். இதுகுறித்தும் விசாரிக்கப்பட வேண்டும். தங்கக் கடத்தல் வழக்கில் பினராயி விஜயனுக்கும் தொடர்பு உண்டு. மத்திய விசாரணை அமைப்புகளுக்கு இது குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. முதல்வர் பினராயி விஜயனுக்காகவே சிவசங்கர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். சிவசங்கர் உண்மையை கூறினால் பினராயி விஜயன் கண்டிப்பாக சிக்குவார். இதனால் தான் அவரைக் காப்பாற்ற பினராயி விஜயன் முயற்சிக்கிறார் இவ்வாறு அவர் பேசினார்.