பீகாரில் 2ம் கட்ட தேர்தல்.. 94 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு..

by எஸ். எம். கணபதி, Nov 3, 2020, 09:33 AM IST

பீகாரில் 2ம் கட்டத் தேர்தலில் இன்று 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அம்மாநிலத்தில் அக்டோபர் 28ம் தேதி, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதன்படி, முதல் கட்டமாகக் கடந்த அக்.28ம் தேதியன்று 71 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் களத்தில் 1463 வேட்பாளர்கள் உள்ளனர்.

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக மற்றும் சிறிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. ராம்விலாஸ் பஸ்வானுடைய லோக்ஜனசக்தி கட்சி இந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் சிராக் பஸ்வான் கட்சியை நடத்தி வருகிறார். அவர் கூட்டணியை விட்டு விலகி விட்டாலும், பாஜகவைத் தொடர்ந்து ஆதரிக்கிறார்.அவரது லோக்ஜனசக்தி, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பாஜக தொகுதிகளில் அந்தக் கட்சிக்கு ஆதரவாக உள்ளது.

லாலுபிரசாத் யாதவின் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் மெகா கூட்டணியை உருவாக்கிப் போட்டியிடுகின்றன. அந்த கூட்டணி, லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.தேர்தல் நடைபெறும் இடங்களில் ஏராளமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர்களை சமூக இடைவெளி விட்டு வரிசையில் நிறுத்தியுள்ளனர். முதல் முறை வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் மிகவும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். நவம்பர் 7ம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும், நவ.10ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.

You'r reading பீகாரில் 2ம் கட்ட தேர்தல்.. 94 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை