கேரள மாநிலம் வயநாட்டில் இன்று அதிகாலை மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும், கேரள அதிரடிப்படை போலீசாருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஒரு மாவோயிஸ்ட் கொல்லப்பட்டதாகவும், இன்னொருவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்குக் கூடுதல் போலீசார் விரைந்துள்ளனர்.கேரள மாநிலம் வயநாடு வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்த வனப்பகுதியிலிருந்து தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களுக்கு எளிதில் சென்று விடலாம். கடந்த பல வருடங்களாகவே இந்த வனப்பகுதியில் போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது.
கடந்த வருடம் இங்குள்ள வைத்திரி பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் புகுந்த மாவோயிஸ்டுகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இது குறித்து அறிந்த அதிரடிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் அந்த சுற்றுலா விடுதி ஊழியர்களை மாவோயிஸ்டுகள் சிறை வைத்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜலீல் என்ற மாவோயிஸ்ட் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். மற்ற மாவோயிஸ்டுகள் காட்டுக்குள் தப்பிச் சென்று விட்டனர். இந்த சம்பவத்திற்குப் பின்னர் இந்த பகுதியில் போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே வயநாடு மாவட்டத்தில் உள்ள படிஞ்சாரேத்தரை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மீன்முட்டி, வாளாரம்குன்னு, பந்திப்பொயில் ஆகிய இடங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இங்கு உள்ள ஊர்களுக்குச் சென்று மாவோயிஸ்டுகள் அரிசி, பருப்பு உட்பட உணவுப் பொருளை வாங்கி சென்றனர்.
இதையடுத்து கடந்த சில தினங்களாக இந்த பகுதியில் அதிரடிப் படை போலீசான தண்டர்போல்ட் பிரிவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.இன்று அதிகாலை வழக்கமான ரோந்து பணியில் இருந்தபோது திடீரென மாவோயிஸ்டுகள் தண்டர்போல் அதிரடிப்படை போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து அதிரடிப்படை போலீசாரும் பதிலுக்கு மாவோயிஸ்டுகளை நோக்கிச் சுட்டனர். பல மணி நேரம் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது.
இதில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இன்னொருவருக்குக் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் கிடைத்ததும் வயநாடு மாவட்ட எஸ்பி பூங்குழலி தலைமையில் கூடுதல் போலீஸ் படை அங்கு விரைந்துள்ளது. பல மணி நேரமாகத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் இருந்து மாவோயிஸ்டுகள் பயன்படுத்திய ஒரு துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. அப்பகுதியில் போலீசின் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.