போதைப் பொருள் கடத்தல் வழக்கு...! மத்திய அமலாக்கத் துறையிடம் மல்லுக்கட்டும் சிபிஎம் மாநில செயலாளரின் மகன்

by Nishanth, Nov 3, 2020, 17:14 PM IST

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பெங்களூரு மத்திய அமலாக்கத் துறையின் காவலில் உள்ள கேரள மாநில சிபிஎம் செயலாளரின் மகன் பினீஷ் கொடியேறி, விசாரணைக்கு ஒத்துழைக்காமல் அதிகாரிகளுடன் மல்லுக்கட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.கேரள மாநில சிபிஎம் செயலாளராக இருப்பவர் கொடியேறி பாலகிருஷ்ணன். இவருக்கு பினோய் கொடியேறி, பினீஷ் கொடியேறி என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இரண்டு பேருமே அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். பினோய் கொடியேறிக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த வருடம் பீகாரைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தன்னுடைய குழந்தைக்கு பினோய் கொடியேறி தான் தந்தை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இது தொடர்பாக பீகார் நீதிமன்றத்தில் பினோய்க்கு எதிராக வழக்கும் உள்ளது. இதேபோல இவரது தம்பி பினீஷ் கொடியேறிக்கு எதிராகக் கேரளாவில் போலீசாரை தாக்கியது உள்பட ஏராளமான கிரிமினல் வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த மாதம் பெங்களூருவில் கைது செய்யப்பட்ட ஒரு போதைப் பொருள் கும்பலுடன் பினீஷுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்த கும்பலுக்கு இவர் லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 முறை இவரிடம் விசாரணை நடத்திய மத்திய அமலாக்கத் துறையினர் கடந்த வாரம் பினீஷை கைது செய்தனர். அவரை பெங்களூரு நீதிமன்றம் 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க மத்திய அமலாக்கத் துறைக்கு அனுமதி அளித்தது. பினீஷுக்கு எதிராக ஏராளமான ஆதாரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து தான் மத்திய அமலாக்கத் துறையினர் அவரை கைது செய்தனர். ஆனால் பினீஷ் விசாரணைக்கு எந்த விதத்திலும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. பலமுறை அமலாக்கத் துறை அதிகாரிகளை அவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. தனக்கு உடல் நலம் இல்லை என்று கூறி விசாரணையை அவர் தவிர்த்து வந்தார்.

இதையடுத்து அமலாக்கத் துறையினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துப் பரிசோதித்தனர். ஆனால் பரிசோதனையில் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை எனத் தெரிய வந்தது. இதற்கிடையே நேற்று 5 நாள் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து மீண்டும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால் மீண்டும் 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என்று மத்திய அமலாக்கத் துறையினர் கேட்டனர். தொடர்ந்து அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க மத்திய அமலாக்கத் துறைக்குப் பெங்களூரு சிவில் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதையடுத்து அவரிடம் மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பினீஷ் போதைப் பொருள் கடத்தலுக்குப் பண உதவி செய்ததோடு மட்டுமில்லாமல் அவர் போதைப் பொருளைப் பயன்படுத்தியும் வந்துள்ளார் என்று மத்திய அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. கடந்த சில வருடங்களில் போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு பினீஷ் 5 கோடிக்கு மேல் பண உதவி செய்துள்ளார் என்றும், அந்த பணம் முழுவதும் போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்தது என்றும் மத்திய அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே கேரளாவில் உள்ள பினீஷின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தவும் பெங்களூர் மத்திய அமலாக்கத் துறையினர் தீர்மானித்துள்ளனர். நாளுக்கு நாள் பினீஷ் மீது பிடி இறுகி வருவதைத் தொடர்ந்து கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

You'r reading போதைப் பொருள் கடத்தல் வழக்கு...! மத்திய அமலாக்கத் துறையிடம் மல்லுக்கட்டும் சிபிஎம் மாநில செயலாளரின் மகன் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை