கேரள மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன். இவர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் உள்துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி கேரளா முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் நடந்த போராட்டத்தை முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, மானபங்கம் செய்யப்பட்டால் நல்ல நடத்தை உள்ள பெண்கள் தற்கொலை செய்து கொள்வார்கள். அல்லது மீண்டும் அது போன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்க அவர்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பார்கள் என்று பேசினார்.
முல்லப்பள்ளி ராமச்சந்திரனின் இந்த பேச்சுக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து உடனேயே தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ராமச்சந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள மகளிர் ஆணைய தலைவி ஜோசபின் கூறினார். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராமச்சந்திரனுக்கு எதிராக கேரள மகளிர் ஆணையம் சுயமாக ஒரு வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சோலார் பேனல் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சரிதா நாயர் கேரள டிஜிபியிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து முல்லப்பள்ளி ராமச்சந்திரனுக்கு எதிராக திருவனந்தபுரம் மகளிர் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.