வங்கிகளில் இஎம்ஐ ஒழுங்காக கட்டியவர்களுக்கு இன்று முதல் பரிசு...!

by Nishanth, Nov 5, 2020, 14:47 PM IST

கொரோனா காலத்தில் 6 மாதங்கள் வங்கிகளில் வாங்கிய கடனுக்கான இஎம்ஐ தொகையை ஒழுங்காகக் கட்டியவர்களுக்கு இன்று முதல் குறிப்பிட்ட தொகை அவரவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் இறுதி வாரத்தில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏராளமானோருக்கு வேலை பறிபோனது. தொழில்கள் நலிவடைந்து லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர். பல தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டன.

பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்தைப் பாதியாகக் குறைத்தன. இதனால் ஏராளமானோர் கடும் அவதிப்பட்டனர். வங்கிகளில் வீடு கட்டுவதற்கும், கல்விக்கும், தொழில் தொடங்குவதற்கும் என பல்வேறு தேவைகளுக்காகக் கடன் வாங்கியவர்கள் மாத இஎம்ஐ கட்ட முடியாமல் கடும் சிரமப்பட்டனர்.இதையடுத்து லாக்டவுன் முடியும் வரை வங்கிகளில் இஎம்ஐ கட்டுவதில் விலக்கு அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து முதலில் 3 மாதங்களுக்கும் பின்னர் மேலும் 3 மாதங்களுக்கும் இஎம்ஐ கட்ட விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் இந்த கால அளவில் கடன் தொகைக்கான வட்டியும், கூட்டு வட்டியும் கட்ட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. இதைப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், வட்டி மற்றும் கூட்டு வட்டியை ரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசிடம் தெரிவித்தது. ஆனால் முதலில் மத்திய அரசு அதற்கு மறுப்பு தெரிவித்தது. இதை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. வட்டி, கூட்டுவட்டியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து மத்திய அரசு வட்டியை ரத்து செய்வதாகக் கூறியது .இதன் மூலம் அரசுக்கு 6,500 கோடி நஷ்டம் ஏற்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் கடந்த 6 மாதம் தவறாமல் இஎம்ஐ கட்டியவர்களுக்கும் சலுகை அளிக்க மத்திய அரசு முன்வந்தது. இதன்படி ஒழுங்காக இஎம்ஐ கட்டியவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை அவர்களுடைய வங்கிக் கணக்கில் முதலீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை இன்று முதல் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்