புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டத்தின் (Pradhan Mantri Fasal Bima Yojana) வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடப்பு பருவத்தில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் இணைய தகுதியைப் பெற்றுள்ளனர். விவசாயிகளின் நலன் கருதிப் பயிர்க் காப்பீடு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தில் நிலம் உள்ள அல்லது குத்தகைக்கு நிலம் வைத்துள்ள அனைவரும் இந்த காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த பயிர்க் காப்பீடு திட்டத்தில் இணைய விவசாயிகளின் ஆதார் எண், வங்கிக் கணக்கு புத்தகம், சிட்டா நகல் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட அடங்கல் ஆகியவற்றை பொதுச் சேவை மையத்தின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடத்திலும் சம்பா மற்றும் குருவை சாகுபடிகளின் போதும் இந்த காப்பீடு திட்டம் அறிவிக்கப்படும். தனியார் வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் பெற்றவர்கள் விருப்பத்தின் பேரில் கடன் வாங்கிய வங்கியின் மூலம் இந்த காப்பீடு திட்டத்தில் சேரலாம்.மேலும் நெல் பயிர் , எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற அனைத்து விதமான பயிர்களுக்கும் இந்த திட்டத்தின் மூலம் காப்பீடு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு காப்பீடு செய்யப்பட்ட பயிர்கள் இயற்கையின் சீற்றத்தாலும் அல்லது வறட்சியாலும் கருகி விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் போது இந்த காப்பீட்டின் மூலம் அந்த இழப்பைச் சரி செய்து கொள்ளலாம்.விவசாயிகள் தங்கள் கிராமத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கான காப்பீடு, காப்பீட்டின் நிலை மற்றும் காப்பீடு செய்வதற்கான பொதுச் சேவை மையம் போன்ற தகவல்களை அறிந்து கொள்ளத் தமிழக அரசு வெளியிட்டுள்ள உழவின் செயலியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சம்பா நெல் சாகுபடிக்கான பயிர்க் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 30 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.கீழே உள்ள இணைப்பின் மூலம் உழவன் ஆப்பை பெறலாம்.