பீகாரில் தேர்தல் முடிவு வந்த பின்பு, தேஜஸ்வி யாதவிடம் முதல்வர் நிதிஷ்குமார் தலை வணங்குவார் என்று சிராக் பஸ்வான் கமென்ட் அடித்துள்ளார்.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, 3 கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 2 கட்டத் தேர்தல் முடிந்த நிலையில், வரும் 7ம் தேதி மூன்றாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
அங்கு ஐக்கிய ஜனதாதளம்-பாஜக மற்றும் சிறிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. ராம்விலாஸ் பஸ்வானுடைய லோக்ஜனசக்தி கட்சி, இந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் சிராக் பஸ்வான் கட்சியை நடத்தி வருகிறார். அவர் கூட்டணியை விட்டு விலகி விட்டாலும், பாஜகவை தொடர்ந்து ஆதரிக்கிறார்.அவரது லோக்ஜனசக்தி, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பாஜக தொகுதிகளில் அந்தக் கட்சிக்கு ஆதரவாக உள்ளது.
இந்நிலையில், லோக்ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:நவம்பர் 10ம் தேதி தேர்தல் முடிவுக்குப் பிறகு நிதிஷ் பதவியிழப்பார். ஒரு காலத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துப் பேசிய நிதிஷ்குமார், இப்போது மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காகப் பிரதமரிடம் தலை வணங்கி நிற்கிறார். பதவி ஆசையால் அவர் எதுவும் செய்வார். நவ.10ம் தேதிக்கு பிறகு பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அவர், ஆர்ஜேடி தலைவரான தேஜஸ்வி யாதவிடம் தலை வணங்கி நிற்பார். நிதிஷ்குமார் ஆரம்பத்தில் சிஏஏ சட்டத்தை ஆதரித்தார். அதற்குப் பிறகு அதை எதிர்த்தார். பிறகு பாஜகவின் முடிவுகளை ஏற்றுக் கொண்டார். இப்போது யோகி ஆதித்யநாத் அந்த சட்டத்தை ஆதரித்துப் பேசியதும், அதற்காக அவரை நிதிஷ்குமார் விமர்சித்துப் பேசுகிறார்.
இவ்வாறு சிராக் பஸ்வான் கூறினார்.