வேல்யாத்திரையை கைவிடுவது பாஜகவுக்கு நல்லது.. அமைச்சர் எச்சரிக்கை..

by எஸ். எம். கணபதி, Nov 5, 2020, 15:14 PM IST

வேல் யாத்திரையை கைவிடுவதுதான் பாஜகவுக்கு நல்லது என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.தமிழக பாஜக சார்பில் நாளை(நவ.6) முதல் டிச.6ம் தேதி வரை வேல் யாத்திரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. திருத்தணியில் நாளை தொடங்கி டிச.6ல் திருச்செந்தூரில் யாத்திரை முடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் அச்சம் காரணமாக இந்த யாத்திரைக்கு அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசு சார்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று(நவ.5) அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழக அரசின் நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா வைரஸ் தாக்கம் வெகுவாக குறைந்திருக்கிறது. ஆனாலும், 2வது அலை, 3வது அலை வரலாம் என்று சொல்லப்படுவதை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. அதனால்தான், இந்த சமயத்தில் வேல் யாத்திரை நடத்த வேண்டாம் என்று பாஜகவுக்கு கூறுகிறோம். அந்த யாத்திரைக்கு அரசு தடை விதித்திருக்கிறது.

பாஜகவினர் இதற்கான காரணத்தை உணர்ந்து, பொதுமக்கள் நலன் சார்ந்த விஷயம் என்பதால் வேல் யாத்திரையைக் கைவிடுவது அவர்களுக்கு நல்லது. அந்த கட்சிக்கும் நல்லது. அனைவரும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்தான். ஏழு பேர் விடுதலை வழக்கில், ஜெயலலிதா வழியில் சட்டசபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்பி வைத்தோம். இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் இப்போது ஒரு கருத்து தெரிவித்துள்ளது. அந்த கருத்தைக் கவனத்தில் கொண்டு கவர்னர் நல்ல முடிவை அறிவிப்பார் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

You'r reading வேல்யாத்திரையை கைவிடுவது பாஜகவுக்கு நல்லது.. அமைச்சர் எச்சரிக்கை.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை