தடையை மீறி வேல் யாத்திரை.. பாஜக அலுவலகத்தில் பரபரப்பு..

by எஸ். எம். கணபதி, Nov 6, 2020, 09:24 AM IST

தடையை மீறி, வேல் யாத்திரையை பாஜக நடத்தப் போவதாகவும், யாத்திரை போராட்டமாக மாறும் என்றும் ஹெச்.ராஜா கூறினார்.தமிழகத்தில் எப்படியாவது கட்சியை வளர்த்து விட வேண்டுமென்று தவிக்கும் பாஜகவினர், வடமாநிலங்களைப் போல் இங்கும் இந்துத்துவா கொள்கையை அடிப்படையாகக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

அதில் ஒன்றாக, இன்று(நவ.6) முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை வேல் யாத்திரை என்ற பெயரில் யாத்திரை நடத்தவிருப்பதாகத் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார். இந்த யாத்திரையில் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என்றும், திருத்தணியில் தொடங்கும் வேல் யாத்திரை, டிசம்பர் 6ல் திருச்செந்தூரில் நிறைவு பெறுகிறது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முஸ்லிம்கள் கடைப்பிடிக்கின்றனர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட ஆண்டிலிருந்து டிச.6ம் தேதி என்பது நாடு முழுவதும் பதற்றமான நாளாகவே இருந்து வருகிறது. அந்த நாளில் ரதயாத்திரையை முடிக்க வேண்டுமென்று பாஜக திட்டமிட்டிருப்பதில் ஏதோ உள்நோக்கம் உள்ளதாகவும், வேல் யாத்திரை பெயரில் மதக் கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில், வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி செந்தில்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த ஐகோர்ட், இது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று கூறியது. தமிழக அரசு தரப்பில், கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால் ஊர்வலங்கள், பேரணிகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பாஜகவின் வேல் யாத்திரைக்கும் அனுமதி தர முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
வேல் யாத்திரைக்குத் தடை விதிக்கப்பட்டாலும் பாஜகவினர் இன்று திட்டமிட்டபடி வேல் யாத்திரையை நடத்த முடிவு செய்தனர். இன்று அதிகாலையில் சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் எல்.முருகன் மற்றும் தலைவர்கள் கூடினர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு, பரபரப்பாகக் காணப்பட்டது.அப்போது, கட்சியின் முன்னாள் தேசிய செயலர் ஹெச்.ராஜா கூறுகையில், எங்களின் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி கொடுத்தால் யாத்திரையாக நடத்துவோம். இல்லாவிட்டால் அது போராட்டமாக மாறும். பள்ளிகளைத் திறக்கும் மாநில அரசு, எங்கள் யாத்திரைக்கு மட்டும் எப்படி கொரோனாவை காரணம் காட்டலாம்? எனவே, தடையை மீறிச் செல்வோம் என்றார்.

கட்சியின் மாநிலத் எல்.முருகன் அளித்த பேட்டியில், நான் முருகனைத் தரிசிப்பதற்காகத் திருத்தணிக்குச் செல்கிறேன். அது அரசியல் சட்டத்தின்படி எனக்கு உள்ள உரிமை. யாரையும் கோயிலுக்குச் செல்லக் கூடாது எனத் தடுக்க முடியாது. நான் திருத்தணிக்குச் செல்வேன் என்றார். பாஜகவினர் தடையை மீறி போராட்டம் நடத்தினால், அவர்களைக் கைது செய்வதற்குத் திருத்தணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

You'r reading தடையை மீறி வேல் யாத்திரை.. பாஜக அலுவலகத்தில் பரபரப்பு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை