திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் மூலம் மத நூல்கள் மற்றும் பேரீச்சம்பழம் இறக்குமதி செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் ஜலீல் 9ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக கூறி சுங்க இலாகா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பும், மத்திய அமலாக்கத் துறையும் இவரிடம் விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரகம் மூலம் 30 கிலோ தங்கம் கடத்திய வழக்கு கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷுடன் நெருக்கமாக இருந்ததால் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
தற்போது இவர் மத்திய அமலாக்கத் துறையின் காவலில் விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஸ்வப்னாவுடன் கேரளா அமைச்சர்கள் உள்படப் பல முக்கிய பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. ஸ்வப்னாவுடனான நெருக்கத்தைப் பயன்படுத்தி கேரள உயர் கல்வித்துறை அமைச்சரான ஜலீல், தூதரக பார்சலில் மத நூல்கள் மற்றும் பேரீச்சம்பழத்தைக் கொண்டு வந்தது தெரியவந்தது.இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு, சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத் துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த மாதம் அமைச்சர் ஜலீலிடம் தேசிய புலனாய்வு அமைப்பும், மத்திய அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தின. அமைச்சர் ஜலீலிடம் மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தியது கேரள அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமைச்சர் ஜலீலிடம் சுங்க இலாகாவும் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது. வரும் 9ம் தேதி கொச்சியில் உள்ள சுங்க இலாகா தலைமை அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறி அமைச்சர் ஜலீலுக்கு இன்று சுங்க இலாகா நோட்டீஸ் கொடுத்துள்ளது. அமைச்சர் ஜலீலிடம் சுங்க இலாகா விசாரணை தீர்மானித்துள்ளது கேரள அரசியல் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.