கடந்த சில தினங்களுக்கு முன் கேரள மாநிலம் வயநாட்டில் அதிரடிப்படை போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மாவோயிஸ்ட் வேல்முருகனின் உடலில் இருந்து 4 துப்பாக்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் அவர் உடல் முழுவதும் 40க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்தன. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளன. கேரள மாநிலம் வயநாடு வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. அடிக்கடி இப்பகுதியில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்துவதும் உண்டு.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாகக் கேரள அதிரடிப் படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிரடிப் படை போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்குப் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் நடந்த விசாரணையில் கொல்லப்பட்டது தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த வேல்முருகன் (32) எனத் தெரியவந்தது. இதுகுறித்து தேனியில் உள்ள வேல்முருகனின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உறவினர்கள் கேரளா விரைந்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் வேல்முருகனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உடல் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள் வெளிவந்துள்ளன. அதில் வேல்முருகனின் உடலில் 4 துப்பாக்கி குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் உடல் முழுவதும் 40க்கும் மேற்பட்ட காயங்களும் காணப்பட்டன. வயிறு மற்றும் மார்பு பகுதியில் தான் அதிகளவில் காயங்கள் இருந்தன. அவரது உடைகள் தடயவியல் பரிசோதனைக்காகத் திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மாவோயிஸ்ட் வேல்முருகன் சுட்டுக் கொல்லப்பட்டதற்குக் கேரள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.