காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. மேலும், அம்மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், வன்முறைச் சம்பவங்கள் வெடிக்கலாம் என்ற அச்சத்தில் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்படப் பல கட்சித் தலைவர்கள், இயக்கங்களின் தலைவர்கள் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். மேலும், மொபைல் மற்றும் தொலைப்பேசி, இணையதள சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன.
இது நடந்து முடிந்து ஓராண்டு கடந்த நிலையில், பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் மக்களுக்கு வழங்க கோரி குப்கார் கூட்டமைப்பு என்ற அமைப்பை காஷ்மீரின் கட்சிகள் துவங்கியுள்ளன. இந்த அமைப்பின் தலைவராக பரூக் அப்துல்லா நியமிக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தை மீண்டும் பெறுவது மட்டுமே எங்கள் ஒரே இலக்கு என கூட்டமைப்பு அறிவித்து செயல்பட துவங்கியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் பேசியுள்ளார். அதில், ``இந்தியாவில் சட்டப்பிரிவு 370-க்கு இனி எந்த இடமும் இல்லை. வேண்டும் என்றால் பரூக் அப்துல்லா பாகிஸ்தானுக்குச் சென்று சட்டப்பிரிவு 370-ஐயும், 35 ஏ- வையும் அமல்படுத்திக்கொள்ளட்டும். இந்தியாவில் இந்த இரண்டு சட்டப்பிரிவுக்கும் இனி எந்த இடமும் கி்டையாது" எனக் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.