பீகாரில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன. இதன்படி தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகா கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. கடந்த மாதம் 28ம் தேதி முதல் கட்டத்தில் 71 தொகுதிகளுக்கும், நவம்பர் 3ம் தேதி இரண்டாம் கட்டத்தில் 94 தொகுதிகளுக்கும், இன்று மூன்றாவது கட்டத்தில் 78 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் பாஜக கூட்டணி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது.
மறுபக்கத்தில் தேஜஸ்வி யாதவ் தலைமையில் மகா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் களமிறங்கியது. பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட பாஜக தலைவர்களும், மகா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்படத் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
மூன்று கட்ட தேர்தலும் முடிவடைந்த நிலையில் இன்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகா கூட்டணிக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் எனத் தெரிய வந்துள்ளது. ரிபப்ளிக் டிவி மற்றும் ஜன் கி பாத் நடத்திய சர்வேயில் மகா கூட்டணிக்கு 118 முதல் 138 தொகுதிகளும், பாஜக கூட்டணிக்கு 91 முதல் 115 தொகுதிகளும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. ஏ பி பி சர்வேயில் மகா கூட்டணிக்கு 108 முதல் 131 இடங்கள் வரை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 104 முதல் 128 இடங்கள் கிடைக்கும். டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் சர்வேயில் மகா கூட்டணிக்கு 120 தொகுதிகளும், பாஜக கூட்டணிக்கு 116 தொகுதிகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடந்த 28 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 16 முதல் 18 தொகுதிகள் கிடைக்கும் என்று ஆக்சிஸ் மை இந்தியா சர்வேயில் கூறப்பட்டுள்ளது.