தமிழக மாவோயிஸ்டை கேரள போலீசார் பிடித்து வைத்து சுட்டுக் கொன்றனர் உறவினர்கள் பரபரப்பு புகார்.

by Nishanth, Nov 8, 2020, 12:36 PM IST

வயநாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மாவோயிஸ்ட் வேல்முருகனை கேரள போலீசார் பிடித்து வைத்து சுட்டுக் கொன்றனர் என்று அவரது உறவினர்கள் பரபரப்பு புகார் கூறியள்ளனர். கேரள நீதிமன்றத்தில் நாளை கேரள போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடரப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம் வயநாடு வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் கேரள அதிரடிப்படை போலீசுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த வேல்முருகன் (32) என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். விசாரணையில் இவர், தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது. இவர் மீது தமிழகத்திலும் ஏராளமான வழக்குகள் உள்ளன. இதனால் இவரை தமிழக போலீசார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருந்தனர்.

வேல்முருகன் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 2 லட்சம் இனாமும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வயநாடு வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட வேல்முருகனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே பிரேத பரிசோதனையில் வேல்முருகனின் உடலில் 4 துப்பாக்கி குண்டுகள் இருந்ததும், உடலில் 40க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்ததும் தெரியவந்தது. இதற்கிடையே மாவோயிஸ்ட் வேல்முருகன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கேரளாவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. போலீசார் போலி என்கவுண்டர் மூலம் வேல்முருகனை சுட்டுக் கொன்றதாக இக் கட்சித் தலைவர்கள் கூறினர். இந்நிலையில் வேல்முருகனின் உறவினர்களும் கேரள போலீஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியது: வேல்முருகனை கேரள போலீசார் பிடித்து வைத்து சுட்டுக் கொன்றுள்ளனர். அவரது உடலில் நான்கு துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதின் மூலம் இது தெரியவந்துள்ளது. மேலும் உடலில் ஏராளமான காயங்களும் இருந்தன.
மாவோயிஸ்டுகள் தான் முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதன் பிறகே தாங்கள் திருப்பி சுட்டதாகவும் கேரள போலீசார் கூறுகின்றனர். ஆனால் இந்த சம்பவத்தில் கேரள போலீசாருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக போலீசார் யாரையும் அனுமதிக்கவில்லை. மறுநாள் மாலையில் தான் பத்திரிகையாளர்களைக் கூட போலீசார் அனுமதித்தனர். போலீசார் எதையோ மறைப்பதற்காகத் தான் இவ்வாறு நடந்து கொண்டுள்ளனர். எனவே நீதி கேட்டு கேரள நீதிமன்றத்தில் நாளை வழக்கு தொடர தீர்மானித்துள்ளோம். வேல்முருகனை சுட்டுக்கொன்ற கேரள போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாங்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளோம். என்று கூறினர்.

You'r reading தமிழக மாவோயிஸ்டை கேரள போலீசார் பிடித்து வைத்து சுட்டுக் கொன்றனர் உறவினர்கள் பரபரப்பு புகார். Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை