அமெரிக்கர்களுக்கு தீபாவளி தொடங்கியது.. ப.சிதம்பரம் வாழ்த்து..

by எஸ். எம். கணபதி, Nov 8, 2020, 12:34 PM IST

அமெரிக்கர்களுக்கு நேற்றிரவு தீபாவளி வந்து விட்டது என்று ப.சிதம்பரம் வாழ்த்தியுள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவ.3ம் தேதி நடைபெற்றது. குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்டு டிரம்ப், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் ஆகியோர் போட்டியிட்டனர். ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டார். கமலா ஹாரிசின் தாயார் சியாமளா கோபாலன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவரது தாய்வழி சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமம் ஆகும். சிறிய வயதிலேயே சியாமளா கோபாலன் அமெரிக்காவுக்கு சென்று நிரந்தரமாக தங்கி விட்டார். தற்போது அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றுள்ளார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் அதிபராக பொறுப்பேற்றவர்களில் அதிக வயதானவர் ஜோ பைடன். அதே போல், முதல் பெண் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆவார். முதல் ஆசியப் பெண் துணை அதிபராவார். இந்நிலையில், ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வருமாறு: அமெரிக்க மக்களுக்கு நேற்று இரவு 9.56 மணிக்கு தீபாவளி தொடங்கியது. ஜனநாயகம் என்பது யாரும் நமக்கு அளித்த பிச்சையல்ல. மகாத்மா காந்தி தலைமையில் நாம் போராடி வென்றது. அந்த “வாராது போல் வந்த மாமணியை” ஒவ்வொரு நாளும் போராடிக் காப்பாற்ற வேண்டும்.

You'r reading அமெரிக்கர்களுக்கு தீபாவளி தொடங்கியது.. ப.சிதம்பரம் வாழ்த்து.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை