பீகார் தேர்தல் முடிவுகள் நாளை வெளிவரவுள்ள நிலையில் இன்றே போஸ்டர்களில் பீகார் முதல்வராகி விட்டார் தேஜஸ்வி யாதவ். பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிந்தது. இதையடுத்து, அம்மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக மற்றும் சிறிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. சிராக் பஸ்வானுடைய லோக்ஜனசக்தி கட்சி இந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. ஆனால், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பாஜக தொகுதிகளில் அந்தக் கட்சிக்கு ஆதரவாக உள்ளது. லாலுபிரசாத் யாதவின் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கிப் போட்டியிட்டன.
அந்த கூட்டணி, லாலுவின் மகனும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக நிறுத்திப் போட்டியிட்டன. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில் ஆர்ஜேடி-காங்கிரஸ் மெகா கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, மெகா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் அமைதி காக்க வேண்டும். பட்டாசுகளை வெடித்தோ, வண்ணங்களைத் தூவியோ சுற்றுச்சூழலைப் பாதிக்கச் செய்யக் கூடாது என்று தனது கட்சித் தொண்டர்களுக்குத் தேஜஸ்வி யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேஜஸ்விக்கு இன்று 31வது பிறந்த நாள். அவருக்கு வாழ்த்து தெரிவித்து தொண்டர்கள் வைத்துள்ள பேனர்கள் மற்றம் போஸ்டர்களில், நாட்டின் இளம் முதலமைச்சர் தேஜஸ்வி என்று குறிப்பிட்டுள்ளனர். தேர்தல் முடிவுகளுக்கு முன்பே அவரை முதல்வராக்கி விட்டனர்.
தேஜஸ்வி முதல்வரானால் நாட்டின் இளம் முதல்வர் என்ற சிறப்பை பெறுவார். ஏற்கனவே கடந்த 1967ம் ஆண்டில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் எம்.ஓ.எச்.பரூக் தனது 29ம் வயதில் முதல்வர் ஆனார். அதே போல், 1968ம் ஆண்டில் பீகாரில் சதீஷ் பிரசாத்சிங் தனது 32வது வயதில் முதல்வராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.