கேரளாவில் தமிழக மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை.. நீதி விசாரணை கோரி உறவினர்கள் வழக்கு

by Nishanth, Nov 9, 2020, 20:06 PM IST

கேரள மாநிலம் வயநாட்டில் கேரள அதிரடிப்படை போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் வேல்முருகன் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் நீதி விசாரணை கோரி வேல்முருகனின் உறவினர்கள் இன்று கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். கேரள மாநிலம் வயநாடு வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும், கேரள அதிரடிப்படை போலீசாருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் தேனி மாவட்டம் பெரிய குளத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் போலீஸ் தரப்பில் கூறுகையில், மாவோயிஸ்டுகள் தான் முதலில் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், இதனால் வேறு வழியின்றி தற்காப்புக்காக போலீசார் திருப்பி சுட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மாவோயிஸ்டுகள் குழுவில் 5 பேருக்கு மேல் இருந்ததாகவும், மற்ற அனைவரும் காட்டுக்குள் தப்பிச் சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது போலி என்கவுண்டர் என்று கேரளாவில் உள்ள காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டினர். வேல்முருகனின் உறவினர்களும் இது போலி என்கவுண்டர் என குற்றம் சாட்டினர். போலீசார் வேல்முருகனை பிடித்து வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக அவரது சகோதரர் முருகன் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கிடையே வேல்முருகனின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் 4 துப்பாக்கி குண்டுகள் இருந்ததாகவும், 40க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாவோயிஸ்ட் வேல்முருகன் கொல்லப்பட்டதற்கு நீதி விசாரணை கோரி வயநாடு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட வேல்முருகனின் சகோதரர் முருகன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பதவியிலுள்ள ஒரு நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்று வயநாடு மாவட்ட நீதிமன்றத்தில் வேல்முருகனிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் போலீசார் பயன்படுத்திய துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டன.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை