2019-20 நிதியாண்டில் இந்தியாவில் யார் அதிகளவு தொண்டு பணிகளுக்கு அதிக நிதி கொடுத்துள்ளனர் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. எடெல்கிவ் ஹுருன் இந்தியா என்கிற அமைப்பு இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், முன்னாள் விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி முதலிடம் பிடித்துள்ளார். எடெல்கிவ் ஹுருன் அமைப்பின் தகவலின்படி, அசிம் பிரேம்ஜி தனது அறக்கட்டளை மூலம் தினசரி ரூ.22 கோடியும், வருடத்துக்கு ரூ.7,904 கோடியும் தொண்டு பணிகளுக்கு செலவளித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, கோவிட் -19 நிவாரணப் பணிகளுக்கு நிவாரணம் அளித்த உலகின் மூன்றாவது பெரிய நன்கொடையாளர் அசிம் பிரேம்ஜியே என்று ஃபோர்ப்ஸ் அறிவித்தது.
விப்ரோ, விப்ரோ எண்டர்பிரைசஸ் மற்றும் அஸிம் பிரேம்ஜி அறக்கட்டளை இணைந்து நிவாரணப் பணிகளுக்காக கொரோனா ரூ.1,125 கோடியை நன்கொடையாக அளித்துள்ளன. இதற்கிடையே, பிரேம்ஜியின் மகன் ரிஷாத் சில நாட்கள் முன் பதிவிட்ட டுவீட்டில், ``எனது தந்தை எப்போதுமே தான் சேமித்த செல்வத்தின் உரிமையாளர் என்று கருதியது கிடையாது. நாங்கள் வாழும் மற்றும் பணிபுரியும் சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதே விப்ரோவுக்கு பெருமை" என்று நெகிழ்ந்து தந்தையை பாராட்டியுள்ளார். இப்போது மட்டுமல்ல, கடந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் ஆசியா, `ஆசியாவின் மிகவும் தாராளமான கொடையாளி' என்று பிரேம்ஜியை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.