போதைப் பொருள் வழக்கில் மகன் கைது.. சிபிஎம் மாநில செயலாளர் ராஜினாமா

by Nishanth, Nov 13, 2020, 14:34 PM IST

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மகன் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கேரள மாநில சிபிஎம் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் வெளியானதை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக கேரள அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்தக் கடத்தல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷுடன் நெருக்கமாக இருந்ததாக புகார் கூறப்பட்டதை தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தேசிய புலனாய்வு அமைப்பு, மத்திய அமலாக்கத் துறை மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் சுற்றிவளைத்து சிவசங்கரிடம் விசாரணை நடத்தினர்.

இறுதியில் அவரை மத்திய அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். தற்போது இவர் எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கேரள அரசில் பெரும் செல்வாக்கு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியாகவும், முதல்வர் பினராயி விஜயனுக்கும் மிகவும் நெருக்கமானவராகவும் இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டது கேரள அரசியலில் பெரும் பரபரப்பையும், ஆளும் கட்சிக்கும், இடது முன்னணி அரசுக்கும் கடும் நெருக்கடியையும் ஏற்படுத்தியது. இதுமட்டுமில்லாமல் கேரள முதல்வர் அலுவலகத்தை சேர்ந்த மேலும் சில முக்கிய அதிகாரிகளிடமும் மத்திய அமலாக்கத் துறை விசாரணை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பரபரப்பு ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் பெங்களூருவில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு பண உதவி செய்ததாக கேரள சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் மீது புகார் கூறப்பட்டது.

இதையடுத்து கடந்த இரு வாரங்களுக்கு முன் பினீஷை மத்திய அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். தற்போது இவர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போதைப் பொருள் வழக்கில் மாநில சிபிஎம் செயலாளரின் மகன் கைது செய்யப்பட்டது கேரள ஆளுங்கட்சிக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதையடுத்து மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உட்பட எதிர்க் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கொடியேறி பாலகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக சற்று முன் அறிவித்துள்ளார். உடல்நலக் குறைவு ஏற்பட்டிருப்பதால் சில மாதங்கள் விடுமுறை எடுத்துக் கொள்வதாக அவர் கட்சிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து தற்காலிக சிபிஎம் மாநில செயலாளராக விஜயராகவன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

You'r reading போதைப் பொருள் வழக்கில் மகன் கைது.. சிபிஎம் மாநில செயலாளர் ராஜினாமா Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை