டெல்லியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் வேகமாக அதிகரிக்கிறது. நோயைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், 7 முதல் 10 நாட்களுக்குள் நிலைமை சீரடையும் என்றும் முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். கொரோனா பரவலின் தொடக்க கட்டத்தில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்த மாநிலங்களில் டெல்லியும் ஒன்று. நாளடைவில் இங்கு நோயாளிகள் எண்ணிக்கை வெகுவாக குறையத் தொடங்கியது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த புதன்கிழமை 8,593 பேருக்கு நோய் பரவியது. அன்று 85 பேர் மரணமடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் 7,053 பேருக்கு நோய் பரவியது. 104 பேர் மரணமடைந்தனர். இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,400ஐ தாண்டியுள்ளது. டெல்லியில் மீண்டும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்தது.
ஊரடங்கு சட்ட நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் சரியாக இல்லை என்று உயர்நீதிமன்றம் விமர்சித்தது. பொதுமக்கள் உயிருடன் அரசு விளையாடுவதை அனுமதிக்க முடியாது என்றும், பொதுமக்களின் உடல் நலனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தனியார் மருத்துவமனைகளையும் ஈடுபடுத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது: கடந்த சில தினங்களாக டெல்லியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது எனக்கும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. நோய் பரவலை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அடுத்த வாரம் மீண்டும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி வரும். அடுத்த 7 முதல் 10 நாட்களுக்குள் நோயின் தீவிரம் குறையும் என்று கருதுகிறேன். சுற்றுச்சூழல் மாசு தான் நோய் பரவ முக்கிய காரணமாகும். கிராமங்களில் விவசாய பொருட்களின் கழிவுகளை எரிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இவற்றை எரிப்பது தான் சுற்றுச்சூழல் மாசு அதிகரிக்க காரணமாகும். இவ்வாறு அவர் கூறினார்.