ஆக்ராவில் அமைந்திருக்கும் உலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க ஏப்ரல் 1-ஆம்தேதி முதல் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மகாலைக் காண, உலகம் முழுவதிலுமிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். விடுமுறை நாட்களில் மட்டும் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தாஜ்மகாலைப் பார்வையிட வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தாஜ்மகாலைச் சுற்றிப் பார்க்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஞாயிற்றுக் கிழமை (ஏப்ரல் 1) முதல் சுற்றுலாப் பயணிகள் அதிகபட்சமாக 3 மணி நேரம் மட்டுமே தாஜ்மகால் வளாகத்துக்குள் இருக்க முடியும். அதற்கு மேல் இருப்பவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் திட்ட மிடப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை வெளியிட்டுள்ளது. கூட்ட நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வுத் துறை விளக்கம் அளித்துள்ளது.