பாஜக அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே, அண்மையில் தலித்துகளை குரைக்கும் நாய்கள் என கூறியதை அடுத்து கூட்டம் ஒன்றில் பேச வந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை பேசவிடாமல் தலித் அமைப்பினர் தடுத்தனர்.
கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கர்நாடகாவில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
முன்னதாக செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அமித்ஷா, "ஊழல் மலிந்த அரசுக்கு போட்டி வைத்தால் அதில் எடியூரப்பாவின் அரசுக்குத் தான் முதல் இடம் கிடைக்கும்" என்று கூறினார். அதாவது சித்தராமையா என்று கூறுவதற்கு பதிலாக, பாஜக முன்னாள் முதல்வரான எடியூரப்பா பெயரை குறிப்பிட்டார்.
அப்போது அருகில் மற்றொருவர், அமித் ஷாவிடம் எடுத்துரைக்க மறுபடி சித்தராமையா அரசு என குறிப்பிட்டார். அப்போது எடியூரப்பாவும் அருகில் இருந்தார். அமித்ஷாவின் இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ சர்ச்சையானது.
அடுத்த நாள் “ஏழைகளுக்கும் தலித் மக்களுக்கும் சித்தராமையா அரசு ஒன்றும் செய்யாது; அவரை இனியும் நம்பாதீர்கள்” என்றுதான் அமித்ஷா பேசியதை, மொழிபெயர்ப்புய் செய்த பாஜக எம்.பி., பிரகலாத் ஜோஷி, “ஏழைகளுக்கும் தலித் மக்களுக்கும் மோடி அரசு ஒன்றும் செய்யாது; அவரை இனியும் நம்பாதீர்கள்” என்று கூற மீண்டும் சர்ச்சையானது.
இதனிடையே, மைசூருவில் நேற்று வெள்ளிக்கிழமையன்று தலித் தலைவர்களுடன் ஹால் மீட்டிங் ஒன்றில் அமித்ஷா பங்கேற்றார். அப்போது, கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் அமித்ஷா பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
இந்நிகழ்ச்சியில் அமித் ஷா பேசதொடங்கியதுமே, திடீரென பார்வையாளர்கள் பகுதியில் இருந்தவர்கள் எழுந்து நின்று முழக்கங்களை எழுப்ப ஆரம்பித்து விட்டனர். அவர்கள் என்ன முழக்கங்கள் எழுப்புகிறார்கள் என தெரியாமல் அதிர்ச்சியோடு அமித்ஷா பார்த்துக் கொண்டிருந்தார்.
மத்திய பாஜக அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே, அண்மையில் அரசியல் சாசனத்தை மாற்றி அமைப்போம் என கூறியிருந்தார். அதேபோல தலித்துகளை குரைக்கும் நாய்கள் எனவும் கூறியிருந்தார். இதனைக் கண்டித்துத்தான் கூட்டத்திற்கு வந்திருந்த தலித் பிரதிநிதிகள், இளைஞர்கள் அமித்ஷாவை பேச விடாமல் கோஷமிட்டு, பேசாவிடாமல் தடுத்தனர்.