கேரளாவில் முகக் கவசம் அணியாதவர்களுக்கான அபராதத் தொகை 200லிருந்து 500 ஆக உயர்வு

by Nishanth, Nov 14, 2020, 18:46 PM IST

கேரளாவில் தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தை மீறுபவர்களுக்கான அபராதத் தொகை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கான அபராதத் தொகை 200லிருந்து 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலின் தொடக்கக் கட்டத்தில் கேரளாவில் நோய் பரவல் மிகவும் குறைவாகவே இருந்தது. நோய் பரவ வாய்ப்பு இருப்பவர்களை உடனுக்குடன் கண்டுபிடித்து அவர்கள் கண்காணிக்கப்பட்டதால் தொடக்கக் கட்டத்தில் நோயாளிகள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. இதனால் பல உலக நாடுகள் கூட கேரளாவின் நோய் தடுப்பு நடவடிக்கையை பாராட்டின. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மற்ற அனைத்து மாநிலங்களிலும் நோய் பரவல் வேகமாக குறைந்து வருகின்ற நிலையில் கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. இதுவரை நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டிவிட்டது. தினமும் சராசரியாக 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சுகாதாரத் துறை பல தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற போதிலும் நோய் பரவல் குறையவில்லை.

இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் கேரளாவில் தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்படி முகக் கவசம் அணியாதவர்கள், பொது இடங்களில் துப்புபவர்கள் மற்றும் கொரோனா நிபந்தனைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதமும், சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா நிபந்தனைகளை மீறுபவர்களுக்கான அபராதத் தொகையை உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொதுஇடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கான அபராதத் தொகை 200லிருந்து 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் துப்புபவர்களுக்கு 500 ரூபாயும், திருமண நிகழ்ச்சிகளில் கூடுதல் ஆட்கள் கலந்துகொண்டால் அபராதத் தொகை 1000லிருந்து 5,000 ஆகவும், மரண நிகழ்ச்சிகளில் கூடுதல் ஆட்கள் கலந்து கொண்டால் விதிக்கப்படும் அபராதத் தொகை 200லிருந்து 2,000 ஆகவும், தர்ணா, போராட்டம் மற்றும் கூட்டங்களில் நிபந்தனைகளை மீறினால் அபராதத் தொகை 1,000லிருந்து 3,000 ஆகவும் தனிமையில் இருப்பவர்கள் வெளியே சென்றால் அபராதத் தொகை 1000லிருந்து 2,000 ஆகவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடைகள், அலுவலகத்தை திறந்தால் அபராதத் தொகை 500 லிருந்து 2,000 ஆகவும் தடை உத்தரவை மீறி கூடுதல் ஆட்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் அபராதத் தொகை 1000லிருந்து 5,000 ஆகவும், லாக்டவுனை மீறுபவர்களுக்கான அபராதத் தொகை 200லிருந்து 500 ஆகவும், நோய் பரவ வாய்ப்புள்ள பகுதிகளில் அனுமதி இல்லாமல் நுழைவது மற்றும் அந்தப் பகுதியில் இருந்து அனுமதி இல்லாமல் வெளியே சென்றால் அபராத தொகை தொகை 200லிருந்து 500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

You'r reading கேரளாவில் முகக் கவசம் அணியாதவர்களுக்கான அபராதத் தொகை 200லிருந்து 500 ஆக உயர்வு Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை