அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் ஆஸ்திரேலியாவில் இந்திய வீரர்கள் பயிற்சியை தொடங்கினர்

by Nishanth, Nov 15, 2020, 12:31 PM IST

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டு விட்டது. இதையடுத்து இன்று முதல் வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கினர். வீரர்கள் பயிற்சி செய்யும் புகைப்படங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் முடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்று விட்டனர். ஆஸ்திரேலிய அணியுடன் 4 டெஸ்ட் மற்றும் தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. வரும் 27ம் தேதி முதல் ஒருநாள் போட்டியுடன் தொடர் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் தேர்வு முதலில் சர்ச்சையை ஏற்படுத்தியது. துணை கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகள் எதிலுமே இடம்பெறவில்லை. இதற்கு சுனில் கவாஸ்கர், கவுதம் காம்பிர் உட்பட பல்வேறு முன்னாள் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தவிர காயமடைந்த சில வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் வீரர்கள் தேர்வில் மாற்றம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதில் ரோகித் சர்மாவுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதேபோல சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி நீக்கம் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் நடராஜ் சேர்க்கப்பட்டார். காயம் குணமான பின்னர் இஷாந்த் சர்மா அணியில் சேர்க்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய வீரர்கள் அனைவரும் 14 நாள் தனிமையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா இல்லை என தெரியவந்தது. இதையடுத்து இன்று முதல் வீரர்கள் பயிற்சியை தொடங்கி உள்ளனர். சைனா மேன் ஸ்பின்னர் குல்தீப் யாதவ், வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, மித வேகப்பந்து பந்துவீச்சாளர் ஷார்துல் தாகூர், பேட்ஸ்மேன் சேதேஸ்வர் பூஜாரா ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டனர். இவர்கள் பயிற்சி செய்யும் புகைப்படங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் சுழற்பந்து வீச்சு இரட்டையர்களான யுஸ்வேந்த்ர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் நீண்டகாலத்திற்கு பின்னர் இணைந்து நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். சிட்னி ஒலிம்பிக் பார்க்கில் உள்ள பிளாக்டவுன் சர்வதேச மைதானத்தில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை