உபியில் தொடரும் கொடுமை 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து உடல் உறுப்புகளைத் தோண்டி சாப்பிட்ட கொடூரம்

by Nishanth, Nov 17, 2020, 10:43 AM IST

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சிறுமிகள் தொடர்ந்து பலாத்காரம் செய்து கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இப்போது குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக 6 வயது சிறுமியை 2 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்து கொடூரமாக உடலை வெட்டி உறுப்புகளைத் தோண்டி எடுத்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாகக் கணவன், மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

நாளுக்கு நாள் இங்குப் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குற்றவாளிகளுக்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி வருகின்ற போதிலும் கொடுமைகள் குறையவில்லை. பச்சிளம் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை பலாத்காரம் செய்யப்பட்டு வருகின்றனர். பலாத்காரம் செய்வதோடு மட்டுமல்லாமல் அவர்களைக் கொடூரமாகக் கொலையும் செய்கின்றனர்.

கடந்த இரு மாதங்களுக்கு முன் இங்குள்ள ஹத்ராஸ் என்ற இடத்தில் 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடத்தி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நாடு முழுவதும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். ஆனால் அதன்பிறகும் பலாத்கார சம்பவங்கள் குறையவில்லை. இந்நிலையில் இதுவரை நடந்த சம்பவங்களை விடக் கொடூரமான ஒரு சம்பவம் தற்போது உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்குக் குழந்தை பிறப்பதற்காக 6 வயது சிறுமியை 2 பேர் சேர்ந்து கூட்டுப் பலாத்காரம் செய்து பின்னர் அந்த சிறுமியின் உடலை வெட்டி உடல் உறுப்புகளை வெளியே எடுத்துச் சமைத்துச் சாப்பிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன் இங்கு உள்ள கான்பூர் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் 6 வயது சிறுமியின் உடல் மிகவும் கொடூரமாகத் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து அறிந்ததும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். தொடர்ந்து அந்த சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அந்த சிறுமி கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டதும், நுரையீரல், கல்லீரல் உட்பட உடல் உறுப்புகள் தோண்டி எடுக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் கத்தம்பூர் பகுதியைச் சேர்ந்த அங்குல் குரில் (20) மற்றும் பீரான் (21) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் விசாரணை நடத்தியபோது தான் திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. அப்பகுதியைச் சேர்ந்த பரசுராம் என்பவருக்கு 20 வருடங்களுக்கு மேலாகக் குழந்தைகள் இல்லை என்றும், இதற்காக 10 வயதுக்கு உட்பட்ட சிறுமியைக் கொன்று உடல் உறுப்புகளைச் சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்று ஒருவர் கூறியதாகவும், அதற்காகத் தான் சிறுமியைக் கடத்திச் சென்று பலாத்காரம் செய்து கொன்று உடல் உறுப்புகளை எடுத்ததாகவும் அவர்கள் கூறினர். இதைக்கேட்டு போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இவர்கள் இருவரும் அளித்த தகவலின் பேரில் பரசுராமனையும், அவரது மனைவியையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வழக்கம்போல முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை