திமுக கூட்டணியில் அதிக இடங்களைப் பெறுவதற்காக திமுகவை நிர்ப்பந்தம் எதுவும் செய்ய மாட்டோம். எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை மட்டுமே கேட்போம் என்று காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டு ராவ் கூறியிருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்ஜேடி கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றது. அக்கூட்டணியில் 70 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே வென்றது. கூடுதலாக 10 இடங்களில் வென்றிருந்தால், தேஜஸ்வி யாதவ் முதலமைச்சராகி இருப்பார்.
காங்கிரஸ் கட்சிக்கு உறுதியான தலைமை இல்லாததால், அக்கட்சி எல்லா மாநிலங்களிலும் வீழ்ந்து விட்டது. அதனால், இனி வரும் மாநில தேர்தல்களில் கூட்டணிகளில் அதிக இடங்களைப் பெறும் சக்தியை அக்கட்சி இழந்து விட்டது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.இந்த சூழலில், தமிழகத்தில் இன்னும் ஐந்தாறு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் நீடிக்கும் காங்கிரஸ் கட்சிக்குக் குறைந்த இடங்களையே திமுக அளிக்கும் என்று பேச்சு அடிபடுகிறது.
இதற்கிடையே, தமிழக காங்கிரசின் மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டு ராவ், தி இந்து ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:பீகார் தேர்தல் முடிவு அப்படியே தமிழகத்தில் எதிரொலிக்கும் என்று ஒப்பிட முடியாது. காரணம், நாடாளுமன்றத் தேர்தலில் பீகாரில் நாங்கள் பெரும் தோல்வி அடைந்தோம். ஆனால், தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணிதான் அமோக வெற்றி பெற்றது. இங்கு மதச்சார்பற்ற கூட்டணிக்குத்தான் மக்களின் ஆதரவு உள்ளது.ஆனாலும், கூடுதல் இடங்களைப் பெறுவதற்காக எந்த வகையிலும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க மாட்டோம். களத்தில் உள்ள உண்மை நிலவரம் குறித்து ஆராய்ந்து எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைத்தான் கேட்போம். தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதே எங்கள் நோக்கமாக இருக்கும். அதனால், எங்கள் கட்சியில் உள்ள பலமான வேட்பாளர்களையும், செல்வாக்கு பெற்ற தொகுதிகளையும் ஆராய்ந்து வருகிறோம். குறைந்தது 100 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் ஓட்டுகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கும் பெற்றுத் தருவோம். அது கடும் போட்டி உள்ள தொகுதிகளில் நிச்சயமாக திமுகவுக்கு உதவும்.
இவ்வாறு தினேஷ் குண்டு ராவ் கூறியிருக்கிறார்.