நீதிமன்ற அவமதிப்புக்காக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனை பதவி நீக்கம் செய்யக் கோரும் வழக்கில் இருந்து நீதிபதி யு.யு.லலித் விலகிக் கொண்டார். ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தாலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த அக்டோபர் 6ம் தேதியன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஜெகன்மோகன் சந்தித்தார். அதே நாளில், ஜெகன்மோகன் ஒரு கடிதத்தை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாப்டேவுக்கு அனுப்பினார். அதில் சுப்ரீம் கோர்ட்டின் 2வது சீனியர் நீதிபதி என்.வி.ரமணா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன. அதாவது நீதிபதி ரமணா, ஆந்திர அரசு தொடர்பான வழக்குகளில் அம்மாநில ஐகோர்ட் நீதிபதிகளை நிர்ப்பந்தித்து வருவதாக கூறப்பட்டது. மேலும், அடுத்த சில நாட்களில் முதல்வர் ஜெகனுடைய முதன்மை ஆலோசகர் அஜயா கல்லாம், அந்த கடிதத்தை மீடியாவுக்கு வெளியிட்டார். மேலும், நீதிபதி ரமணாவும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் நெருக்கமானவர்கள் என்றும் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, ஜெகன்மோகன் ரெட்டி மீது பிரபல வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்யாயா மற்றும் வழக்கறிஞர்கள் ஜி.எஸ்.மணி, சுனில்குமார் சிங் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தொடர்ந்தனர். இந்த வழக்குகளை தொடர்வதற்கு அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் அனுமதி தரவில்லை. அவர் கூறுகையில், ஜெகன் எழுதிய கடிதத்தை தலைமை நீதிபதி பரிசீலித்து வருவதால் அவரே நீதிமன்ற அவமதிப்பு குறித்தும் முடிவெடுக்கட்டலாம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி மீது நீதிமன்ற அவமதிப்பு எடுத்து பதவி நீக்கம் செய்யக் கோரும் மனுக்கள் மூன்றும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதி யு.யு.லலித் கூறுகையில், வழக்கில் சம்பந்தப்பட்ட சிலருக்கு தான் வழக்கறிஞராக இருந்த போது வாதாடியிருப்பதாகவும், அதனால் இவ்வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, வேறொரு பெஞ்ச் விசாரணைக்கு இந்த நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை மாற்றுமாறு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து உத்தரவிடப்பட்டது. வழக்கறிஞர் உபாத்யாயா தனது மனுவில், ஜெகன் மோகன் மீது 31 குற்ற வழக்குகள் உள்ளன. அவற்றில் 11 வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கிறது. இந்நிலையில், ஜெகன் வழக்குகள் உள்பட அரசியல்வாதிகளின் மீதான வழக்குகளை விரைவுபடுத்துமாறு நீதிபதி என்.வி.ரமணா கடந்த செப்.16ம் தேதி உத்தரவிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாகவே, ஜெகன்மோகன் அவர் மீது புகார் கூறி கடிதம் அனுப்பியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.