லவ் ஜிகாத்துக்கு எதிராக மத்திய பிரதேச மாநில அரசு சட்டம் 5 வருடம் வரை கடுங்காவல் சிறை

by Nishanth, Nov 17, 2020, 14:36 PM IST

லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் கொண்டு வர மத்தியப் பிரதேச மாநில அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி குற்றம் கண்டு பிடிக்கப்பட்டால் 5 வருடம் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை கிடைக்கும். அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்று மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறியுள்ளார்.மத்தியப் பிரதேச மாநிலம் பரீதாபாத்தில் கடந்த மாதம் பட்டப்பகலில் நிகிதா என்ற கல்லூரி மாணவி அவர் படிக்கும் கல்லூரி அருகே வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், நிகிதாவை அதே பகுதியைச் சேர்ந்த தவுசீப் என்பவர் காதலித்து வந்தது தெரிய வந்தது. அவர் திருமணத்திற்கு வற்புறுத்தியதாகவும், நிகிதாவை மதம் மாற கட்டாயப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு நிகிதா எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தான் தவுசீப் தனது நண்பருடன் சேர்ந்து நிகிதாவை சுட்டுக் கொன்றது தெரியவந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில் தவுசீப் பின்னர் கைது செய்யப்பட்டான். இந்த சம்பவத்திற்குப் பின்னர் லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கோரி மத்தியப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் லவ் ஜிகாத்துக்கு எதிராக உடனடியாக சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் லவ் ஜிகாத் குறித்து ஏராளமான புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் லவ் ஜிகாத்துக்கு எதிராக புதிய சட்டம் கொண்டு வர அரசு தீர்மானித்துள்ளது. அடுத்த சட்டசபை கூட்டத் தொடரிலேயே இந்த சட்டம் நிறைவேற்றப்படும்.

இதன்படி திருமணத்திற்காக மதம் மாற்றினால் 5 வருடம் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை கிடைக்கும். இந்த வழக்கில் கைது செய்யப்படும் முக்கிய குற்றவாளி மீது மட்டுமில்லாமல் அவருக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும் என அவர் கூறினார். ஏற்கனவே லவ் ஜிகாத்துக்கு எதிராகக் கர்நாடகா மற்றும் அரியானா மாநிலங்களும் கடும் சட்டம் கொண்டு வரப் போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You'r reading லவ் ஜிகாத்துக்கு எதிராக மத்திய பிரதேச மாநில அரசு சட்டம் 5 வருடம் வரை கடுங்காவல் சிறை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை