தமிழகத்தில் காவிரி, ஸ்டெர்லைட் மற்றும் நியூட்ரினோ திட்ட விவகாரங்கள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், #IndiaBetraysTamilNadu என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு கிஞ்சித்தும் மதிக்கவில்லை. இதனால், நேற்று சென்னை மெரினா கடற்கறையில் இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தும் அளவுக்கு பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. மாநிலத்தின் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என அனைத்துக் கட்சிகளும் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி தூத்துக்குடி மற்றும் மாநில அளவிலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேலும், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மோடி தலைமையிலான அரசு முனைப்பு காட்டி வருகிறது.
இப்படி பல்வேறு பிரச்னைகள் தமிழகத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்க, எதற்கும் செவி மடுக்காமல் இருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. இந்நிலையில், ட்விட்டரில் மத்திய அரசுக்கு எதிராக, `#IndiaBetraysTamilNadu’ ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. பலர் தங்கள் எதிர் கருத்துகளை இந்த ஹாஷடேக்கை இணைத்து பதிவிட்டு வருகின்றனர்.