பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே, குறைந்த விலையில் அரசு வழங்கப் போகும் சானிடரி பேட் திட்டத்துக்கு தானாக முன்வந்து குரல் கொடுத்துள்ளார்.
இந்திய அளவில் பல முக்கிய திரைப்படங்களிலும் கதாபாத்திரங்களிலும் நடித்து பெயர் பெற்றவர் நடிகை ராதிகா ஆப்தே. தமிழில் `அழகுராஜா’, `கபாலி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ராதிகா, எப்போதும் பெண்கள் சந்திக்கும் சமூக பிரச்னைகளுக்கு தானாக முன் வந்து குரல் கொடுத்து வருபவர். இந்நிலையில், அரசின் புதிய திட்டம் ஒன்றுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.
கிராமப்புறங்களில் இருக்கும் பள்ளி மாணவிகளுக்கு சானிடரி பேட்கள் பாக்கெட்டை 5 ரூபாய்க்கும், கிராமப்புற பெண்களுக்கு 24 ரூபாய்க்கும் கொடுக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இந்தத் திட்டத்துக்குத்தான் ராதிகா குரல் கொடுத்துள்ளார்.
இது குறித்து ராதிகா பேசும்போது, `மாதவிடாய் காலங்களில் பெண்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் பல்லாண்டு காலமாக தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், குறைந்த விலையில் சானிடரி பேட்களை அரசு வழங்க முன் வந்துள்ளது வரவேற்கத்தக்கது. இது பல கிராமப்புற பெண்கள் வாழ்க்கையில் வெளிச்சமூட்டும்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.