பதவியேற்ற மூன்றே நாளில் பீகார் கல்வித்துறை அமைச்சர் ராஜினாமா...!

by Nishanth, Nov 19, 2020, 18:26 PM IST

பீகாரில் பதவியேற்ற மூன்றே நாளில் மாநில கல்வித் துறை அமைச்சர் மேவலால் சவுதரி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். ஊழல் புகார் சுமத்தப்பட்ட ஒருவரை அமைச்சராக நியமித்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.பீகாரில் கடும் இழுபறிக்கு இடையே நிதிஷ் குமார் நான்காவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.

மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கையின் போது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. யார் வேண்டுமானாலும் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் கடைசியில் பெரும்பான்மைக்குத் தேவையான தொகுதிகளில் இருந்து 3 தொகுதிகள் மட்டுமே கூடுதலாகப் பெற்று 126 இடங்களில் வெற்றிபெற்று பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது.

நிதிஷ் குமாரின் ஜனதா தளத்தை விட பாஜக அதிக தொகுதிகள் வெற்றி பெற்றதால் நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவி கிடைக்குமா என்று சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் முதல்வர் பதவியை நிதிஷ் குமாருக்கு வழங்குவதாக பாஜக அறிவித்தது. இதையடுத்து கடந்த 16ம் தேதி 4வது முறையாக நிதிஷ்குமார் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
இவரது அமைச்சரவையில் கல்வித் துறை அமைச்சராக மேவலால் சவுதரி பொறுப்பேற்றார். ஆனால் இவர் மீது ஏராளமான ஊழல் புகார்கள் ஏற்கனவே இருந்ததால் மேவலாலை அமைச்சராக நியமித்ததற்கு ஆர்ஜேடி உட்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இவர் பகல்பூர் விவசாய பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தபோது பணம் வாங்கி ஏராளமானோருக்குப் பதவி அளித்ததாகப் புகார் கூறப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தில் சட்டவிரோதமாக உதவி பேராசிரியர், இளநிலை விஞ்ஞானி பொறுப்புக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அப்போது ஜனதா தளத்திலிருந்து மேவலால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் பின்னர் இவர் கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் போராட்டம் வலுத்ததைத் தொடர்ந்து இன்று மேவலால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவியேற்ற மூன்றாம் நாளிலேயே பீகாரில் கல்வித்துறை அமைச்சர் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You'r reading பதவியேற்ற மூன்றே நாளில் பீகார் கல்வித்துறை அமைச்சர் ராஜினாமா...! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை