கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலக நாடுகள் திண்டாடிக் கொண்டு வருகின்றன. இதன் தாக்கத்தில் இருந்து மீள பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக வான்வழி மற்றும் கடல்வழி போக்குவரத்துகளைத் துண்டித்தது.இந்நிலையில் கொரோனா தொற்றின் தாக்கத்தின் வீரியம் குறைந்து கொண்டு வந்ததால் போக்குவரத்து தடைகளைத் தளர்த்த உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வந்தன.
இந்நிலையில் கொரோனா தாக்கத்தின் இரண்டாம் அலை வீசுவதால் மீண்டும் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இதன் தொடர்ச்சியாக ஐக்கிய அரபு எமிரகம், பாகிஸ்தான் உட்பட 11 நாடுகளுக்கு விசா வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இது சம்பந்தமாகப் பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையில் " ஐக்கிய அரபு எமிரகம் கோவிட்-19 இரண்டாம் அலையின் தாக்கத்தில் விசா வழங்க நிறுத்தி வைத்துள்ளது உண்மைதான்" என அறிவித்துள்ளது.
பாகிஸ்தான், துர்க்கி, ஈரான், ஏமன், சிரியா, ஈராக், சோமாலியா, லிபியா, கென்யா மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்குத் தற்காலிகமாக விசா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு எமிரகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இதுவரை 363380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 7230 கொரோனா நோயாளிகள் இறந்துள்ளனர். மேலும் இந்த வாரத்தில் 2000 புதிய கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.