டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதாலும், சீதோஷ்ண நிலை மோசமாக உள்ளதாலும் சோனியா காந்தி வேறு ஊருக்கு குடியேற உள்ளார். சென்னை அல்லது கோவாவில் அவர் குடியேறலாம் எனத் தெரிகிறது. நாட்டிலேயே டெல்லியில்தான் அதிக அளவு காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில ஆம் ஆத்மி அரசு எடுத்து வருகிறது. எனினும், காற்று மாசு அளவு குறைந்தபாடில்லை. தீபாவளிக்கு பட்டாசு வெடித்தால், மாசு அதிகரிக்கும் என்பதால் பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் அரசு தடை விதித்தது. ஆனாலும், தீபாவளிக்கு மக்கள் பட்டாசு வெடித்ததால், காற்று மாசு அலகு 423, 460, 500 என்று அதிகரித்தது. மேலும், டெல்லியில் கடுங்குளிர் காணப்படுகிறது. இன்று(நவ.20) குறைந்தபட்ச வெப்பநிலை 7.5 டிகிரி செல்சியஸ் ஆக இருந்ததாக டெல்லி வானிலை ஆய்வு மைய அதிகாரி குல்தீப் ஸ்ரீவஸ்தவா கூறியிருக்கிறார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டாக்டர்கள் வேறு ஊரில் சென்று சில மாதங்கள் தங்கியிருக்க அறிவுறுத்தியுள்ளனர். அவருக்கு ஏற்கனவே இருதயக் கோளாறு உள்ளதால் சுவாசிப்பதில் சிரமப்படுவதாகவும் அதனால் காற்று மாசு அதிகம் இல்லாத மற்றும் வெப்பமான ஊருக்கு சென்று சில மாதங்கள் தங்கியிருப்பது நல்லது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, சென்னைக்கு வெளியே அல்லது கோவாவில் சோனியா காந்தி குடியேறவிருப்பதாகவும், சில மாதங்கள் அங்கேயே தங்கியிருப்பார் என்றும் கூறப்படுகிறது. அவருக்கு உதவியாக ராகுல்காந்தி அல்லது பிரியங்கா காந்தியும் தங்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 73 வயதான சோனியா காந்தி சமீப காலமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. எனினும், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 103வது பிறந்த நாளையொட்டி நேற்று(நவ.19) அவரது நினைவித்திற்கு சோனியா காந்தி சென்று மலரஞ்சலி செலுத்தினார்.