பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம் நடந்தது என்ன?

by Nishanth, Nov 20, 2020, 14:29 PM IST

பயணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் ரியாத்தில் இருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த இந்தியத் தனியார் விமானம் அவசரமாகப் பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது. இது தொடர்பாக இந்திய விமானத்தின் பைலட் வேண்டுகோள் விடுத்த உடன் பாகிஸ்தான் அதிகாரிகள் எந்த தயக்கமின்றி உடனடியாக விமானத்தைத் தரையிறங்க அனுமதி அளித்தனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்ட போது பாகிஸ்தான் வான் வழியாக இந்திய விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்தியாவிலிருந்து சென்ற விமானங்கள் பல நூறு கிலோ மீட்டர்கள் சுற்றிப் பறந்தன. இந்நிலையில் ஒரு இந்தியப் பயணிகள் விமானம் பாகிஸ்தானில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. சவுதி தலைநகர் ரியாத்தில் இருந்து டெல்லிக்கு கோ ஏர் தனியார் விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் 179 பயணிகள் இருந்தனர்.

இந்நிலையில் இதில் பயணம் செய்த உத்திரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த நவ்ஷாத் என்ற பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. விமானத்தில் வைத்து அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நேரம் செல்லச் செல்ல அவரது உடல்நிலை மோசமடைந்தது.இந்த சமயத்தில் அந்த விமானம் பாகிஸ்தானிலுள்ள கராச்சி அருகே பறந்து கொண்டிருந்தது. பயணிக்கு உடனடியாக அவசர மருத்துவச் சிகிச்சை அளித்தால் மட்டுமே உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து கராச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுடன் கோ ஏர் விமான பைலட் தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறினார்.

விமானத்தைத் தரையிறங்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.அதற்கு கராச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் உடனடியாக அனுமதி அளித்தனர். இதைத் தொடர்ந்து அந்த விமானம் அவசரமாக கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பயணியை விமானத்திலிருந்து இறக்கி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் அந்த விமானம் பல மணி நேரம் தாமதமாகவே டெல்லி வந்தடைந்தது. இதன் பின்னர் கராச்சியில் உள்ள இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் அந்த பயணியின் உடல் வேறு விமானம் மூலம் பிஜ்னோர் கொண்டு செல்லப்பட்டது.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை