நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து தல நடிகர் அஜீத்குமார் வலிமை படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். இதில் போலீஸ் அதிகாரியாகவும் மோட்டார் ரேஸ் வீரராகவும் அஜீத் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஐதாராபாத்தில் நடந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தடைப்பட்டது. அதைத் தொடர்ந்து 5 மாதத்துக்கு பிறகு ஊரடங்கு தளர்வில் கூட இதன் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் காத்திருந்தது. பின்னர் ஒரு மாதம் கழித்தே படப்பிடிப்பு மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டது.
டெல்லியில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டபோது அதிகாரிகள் முக்கிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி தரவில்லை. இதையடுத்து மீண்டும் ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அஜீத் மோட்டார் பைக்கிலேயே ஐதராபாத் சென்று படப்பிடிப்பில் கலந்துகொண்டார். கடந்த 3 வாரத்துக்கும் மேலாகப் படப் பிடிப்பு நடந்து வருகிறது.
சமீபத்தில் அஜித் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சியைப் படமாக்கினார்கள். மோட்டர் சைக்கிளில் வேகமாக வந்து வில்லன்களுடன் அஜீத் மோதும் காட்சி படமாக்கப்பட்ட போது பைக் கவிழ்ந்ததில் அஜீத் தவறி விழுந்து காலில் காயம் ஏற்பட்டது. ஆனாலும் உடனடி சிகிச்சை எடுத்துக் கொண்டு சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் அவர் காட்சியில் பங்கேற்று நடித்துக் கொடுத்து விட்டு சென்னை திரும்பினார்.
மீண்டும் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஒருசில வார இடைவெளிக்குப் பிறகு தொடங்க உள்ளது.அஜீத் ஏற்கனவே வலிமை படத்தில் நடித்தபோது பைக் ரேஸ் காட்சியில் தவறி விழுந்தார். இதில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆபரேஷன் செய்யப்பட்டது. அந்த தழும்பு கைகளில் இன்னமும் உள்ளது.