மத்தியப் பிரதேச மாநிலத்தில் 10 ரூபாய் காட்டி 3 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கொன்று உடலைச் சாக்கில் கட்டி அணையில் வீசிய 22 வயது வாலிபருக்கு போக்சோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக உத்திர பிரதேசம், மத்தியப் பிரதேசம் உட்பட மாநிலங்களில் இதுபோன்ற குற்றங்கள் தினமும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 3 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்து கொன்ற 22 வயது வாலிபருக்கு போக்சோ நீதிமன்றம் அதிவிரைவில் விசாரித்து மரண தண்டனை வழங்கியுள்ளது. கடந்த ஜூலை 17ஆம் தேதி தான் இந்த கொடூர சம்பவம் நடந்தது. மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிந்த்வாரா மாவட்டத்திலுள்ள அமர்வாடா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. இப்பகுதியைச் சேர்ந்த ஒரு 3 வயது சிறுமி திடீரென மாயமானார்.
இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் அமர்வாடா போலீசில் புகார் செய்தனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் அந்த குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் 3 நாட்களுக்குப் பின்னர் ஜூலை 20ம் தேதி அந்தக் குழந்தையின் உடல் அங்குள்ள மஞ்சகோரா என்ற அணையில் மிதந்தது.இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் அந்த சிறுமி கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.போலீசாரின் தீவிர விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ரிதேஷ் துருவ் என்ற 22 வயது வாலிபர் கைது செய்யப்பட்டார்.
இவர் சம்பவத்தன்று 10 ரூபாய் காண்பித்து அந்த சிறுமியை தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த சிறுமியைக் கொலை செய்து உடலைச் சாக்கில் கட்டி அணையில் வீசியுள்ளார். உடலை வீசுவதற்கு அவருக்கு உதவிய அவரது நண்பர் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இந்த வழக்கு அமர்வாடாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கொரோனா பரவலுக்கு இடையேயும் தொடர்ந்து 116 நாட்கள் விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரிதேஷ் துருவுக்கு மரண தண்டனையும், அவரது நண்பருக்கு 7 வருடம் கடுங்காவல் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது.