தங்கக் கடத்தலின் தலைநகராகும் கேரளா கடந்த 5 வருடங்களில் 1500 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

by Nishanth, Nov 23, 2020, 14:28 PM IST

கேரளாவில் கடந்த சில வருடங்களாக வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 1,500 கிலோவுக்கும் அதிகமாகக் கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது. இதன் மதிப்பு 448 கோடி ஆகும்.தமிழ்நாடு, கர்நாடகா உட்பட மாநிலங்களை ஒப்பிடும்போது கேரளா ஒரு மிகச் சிறிய மாநிலமாகும்.

ஆனால் இந்த சின்னஞ்சிறு மாநிலத்தில் 4 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய இடங்களில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. கேரளாவின் வட மாவட்டமான கோழிக்கோட்டில் சர்வதேச விமான நிலையம் உள்ள போதிலும், இதை ஒட்டியுள்ள கண்ணூரிலும் விமான நிலையம் தொடங்க வேண்டும் என்று நீண்ட காலமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து கண்ணூரில் கடந்த இரு வருடங்களுக்கு முன்பு விமான நிலையம் தொடங்கப்பட்டது. இதுவும் சர்வதேச விமானநிலையம் ஆகும். இந்நிலையில் இந்த நான்கு விமான நிலையங்கள் வழியாகக் கேரளாவுக்குத் தங்கக் கடத்தல் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கடத்தலைத் தடுக்க சுங்க இலாகாவினரும், வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளும் பல தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனாலும் பல நூதன முறைகளைக் கையாண்டு எந்த தடையும் இல்லாமல் கடத்தல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.இந்நிலையில் கடந்த 5 வருடங்களில் இதுவரை கேரளாவில் ஒன்றரை டன் கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது தெரியவந்துள்ளது. விமான நிலையங்களில் வைத்து மட்டும் ஒன்றே கால் டன் கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கோழிக்கோடு விமான நிலையத்தில் தான் மிக அதிகமாகக் கடந்த 5 வருடங்களில் 591 கிலோ தங்கம் பிடிபட்டுள்ளது. கொச்சி விமான நிலையத்தில் 500 கிலோவும், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 153 கிலோவும் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த இரு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட கண்ணூர் விமான நிலையத்தில் கூட 51.28 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த 4 விமான நிலையங்களில் கடந்த 5 வருடங்களில் 1,244 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தவிர மற்ற இடங்களில் வைத்து 230 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 448 கோடியாகும். இந்த கணக்குகள் அனைத்தும் கடந்த ஜூன் வரை உள்ளவை மட்டுமே. இதன்பிறகும் பெருமளவு கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது. இதையும் சேர்த்தால் கடத்தல் தங்கத்தின் மதிப்பு மேலும் அதிகரிக்கும்.

You'r reading தங்கக் கடத்தலின் தலைநகராகும் கேரளா கடந்த 5 வருடங்களில் 1500 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை