தலித் ஒருவர் வீட்டில் அமித்ஷா சாப்பிட்டது பிராமணர் சமைத்த உணவு.. மம்தா பானர்ஜி தகவல்..

by எஸ். எம். கணபதி, Nov 24, 2020, 09:37 AM IST

மேற்கு வங்கத்தில் தலித் இனத்தைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் அமித்ஷா சாப்பிட்ட உணவு, அவருக்காகப் பிராமணர் தயாரித்த உணவு என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க மாநிலங்களில் இன்னும் ஐந்தாறு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அங்குக் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் செல்வாக்கை இழந்து விட்டன.

பாஜகவே முக்கிய எதிர்க்கட்சியாக விளங்குகிறது. அங்கு இந்த முறை ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்மாநிலத்திற்கு அடிக்கடி சென்று வருகிறார்.சமீபத்தில் அவர் மேற்கு வங்கத்திற்குச் சென்றிருந்த போது, பங்குராவில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவரது வீட்டிற்குச் சென்று உணவு அருந்தினார். மேலும், பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரரான பிர்சா முண்டா சிலைக்கு மாலை அணிவித்தார். ஆனால், அந்த சிலை பிர்சா முண்டா சிலை அல்ல என்றும் தவறுதலாக அந்த சிலைக்கு அமித்ஷா மாலை அணிவித்து விட்டார் என்றும் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில், பங்குரா மாவட்டத்தின் கத்ரா பகுதியில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தேர்தலுக்காக அமித்ஷா நன்றாக ஷோ காட்டுகிறார். அவர் தலித் ஒருவரது வீட்டில் உணவு சாப்பிட்டாரே, அந்த உணவு அவருக்காகப் பிராமண சமையலர் ஒருவர் தயாரித்து அனுப்பிய உணவு. அந்த தலித் வீட்டில் முட்டைக்கோஸ், கொத்தமல்லி போன்றவை நறுக்குவதை அந்த ஷோவில் பார்த்திருப்பீர்கள். ஆனால், அமித்ஷா இலையில் அவை இல்லை. அவருக்கு பாசுமதி சாப்பாடு, பாஸ்டா போரா போன்றவை பரிமாறப்பட்டதையும் பார்த்திருப்பீர்கள்.. என்று கிண்டலாகக் கூறினார்.மேலும், அவர் பேசுகையில், அமித்ஷாவுக்குச் சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டா யாரென்றே தெரியாது. யாரோ சொல்லிக் கொடுத்து வேறொரு சிலைக்கு மாலை போட்டார். ஆனால், திரிணாமுல் அரசு அந்த பகுதியில் பிர்சா முண்டா சிலையை நிறுவும். பிர்சா முண்டாவின் பிறந்த நாளன்று அரசு விடுமுறை அறிவிக்கப்படும் என்றார்.

More India News


அண்மைய செய்திகள்