உத்திர பிரதேசத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக அவசர சட்டம்.. 5 வருடம் வரை சிறை

by Nishanth, Nov 24, 2020, 20:53 PM IST

உத்திரப் பிரதேச மாநிலத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக அவசர சட்டம் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 5 வருடம் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். உத்திரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவி ஏற்றவுடன் லவ் ஜிகாத் மற்றும் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக சட்டம் கொண்டுவரப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக அவசர சட்டம் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டது. இது குறித்து அமைச்சர் சித்தார்த் நாத் சிங் கூறியது: கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக உத்திரப் பிரதேச மாநிலத்தில் அவசர சட்டம் கொண்டு வர இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக ஒன்று முதல் 5 வருடம் வரை சிறைத் தண்டனையும், ₹ 15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். வயதுக்கு வராத மைனர்களையோ அல்லது எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவை சேர்ந்த பெண்களையும் மதமாற்றம் செய்தால் 3 முதல் 10 வருடம் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். மேலும் ₹ 25 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும். கூட்டமாக மதமாற்றம் நடத்துபவர்களுக்கு 3 முதல் 10 வருடம் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். ₹ 50,000 வரை அபராதம் விதிக்கப்படும். வேறு ஒரு மதத்திற்கு மாறிய பின்னர் திருமணம் செய்ய விரும்பினால் மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் இருந்து 2 மாதங்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்படும் என்று யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். ஆனால் இந்தியாவில் எங்குமே லவ் ஜிகாத் நடைபெறவில்லை என்று மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்