கூகுள் நிறுவனம் மொபைல் செயலி மற்றும் பே.கூகுள்.காம் என்ற இணைய செயலி மூலம் பணமில்லா பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வருகிறது. வரும் ஜனவரி மாதம் முதல் இணைய செயலி சேவை ரத்து செய்யப்படும் என்று கூகுள் நிறுவனம் பயனர்களுக்கு அறிவிக்கை அனுப்பியுள்ளது. "2021 தொடக்கம் முதல் பே.கூகுள்.காம் மூலம் மற்றவர்களுக்கு பணம் அனுப்பவோ, அவர்களிடமிருந்து பெறவோ இயலாது. பணம் அனுப்பவும் பெறவும் கூகுள் பே செயலியை பயன்படுத்தவும்" என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
உடனடியாக பணத்தை மாற்றுவதற்கு கட்டணத்தையும் கூகுள் பே அறிமுகப்படுத்த உள்ளது. "உங்கள் வங்கி கணக்குக்கு பணத்தை மாற்றுவதற்கு 1 முதல் 3 பணி நாள்கள் ஆகும். டெபிட் கார்டு மூலமான பரிவர்த்தனை உடனடியாக நடக்கும். டெபிட் கார்டு மூலம் பணத்தை பரிவர்த்தனை செய்யும்போது 1.5% அல்லது 0.31 டாலர் இவற்றுள் எது அதிகமோ அது வசூலிக்கப்படும்" என்று கூகுள் அறிவித்துள்ளது. கடந்த வாரம் கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு பல்வேறு சிறப்பம்சங்களை அறிவித்துள்ளது. அவை முதன்முதலில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பயன்பாட்டுக்கு வர உள்ளன.