கிரிமினல் சட்டங்கள் சிலரை துன்புறுத்துவதாக மட்டும் பயன்படுத்தக் கூடாது உச்ச நீதிமன்றம் கருத்து

by Nishanth, Nov 27, 2020, 16:17 PM IST

கிரிமினல் சட்டங்கள் சிலரைத் துன்புறுத்துவதற்கான ஆயுதமாக மாறவில்லை என்பதை நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனு மீதான உத்தரவில் உச்சநீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது. ரிபப்ளிக் டிவியின் உள்கட்டமைப்பு அலங்கார பணிகளுக்கான காண்ட்ராக்ட் எடுத்திருந்த மும்பையைச் சேர்ந்த அன்வே நாயக் என்பவர் கடந்த இரு வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். ரிபப்ளிக் டிவி உள்கட்டமைப்பு பணிகளுக்கான பணத்தை கொடுக்காததால் இவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. தனது தற்கொலைக்கு ரிபப்ளிக் டிவி தலைமை நிர்வாக ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி தான் காரணம் என்று அவர் கடிதம் எழுதி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து அர்னாப் கோஸ்வாமி மீது குற்றம் இல்லை என கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

இந்நிலையில் உத்தவ் தாக்கரே அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த வழக்கை தூசிதட்டி எடுத்தது. இதைத்தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீசார் அவரது வீட்டில் வைத்து வலுக்கட்டாயமாக கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி சந்திரசூட் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், கடந்த இரு வாரங்களுக்கு முன் அர்னாபுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அந்த உத்தரவில் நீதிபதிகள் கூறிய விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு: கிரிமினல் சட்டங்கள் சிலரை துன்புறுத்தும் ஆயுதமாக மாறவில்லை என்பதை நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும். சுதந்திரத்தை ஒரு நாள் மறுப்பது கூட பல நாட்கள் சுதந்திரத்தை மறுப்பதற்கு சமமாகும்.

ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்பட்ட புகார் நிரூபணமாகவில்லை. முதற்கட்ட விசாரணையில் அவர் அவர் மீது குற்றம் இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஆதாரங்களை பரிசோதிப்பதில் மும்பை உயர்நீதிமன்றம் தவறு செய்து விட்டது. சட்டங்கள் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வதைப் போலவே கிரிமினல் சட்டங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். மாவட்ட நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை இதில் பொறுப்பு கொண்டு. ஜாமீன் மனுவை விசாரிக்கும் போது உயர் நீதிமன்றங்கள் எந்தெந்த காரியங்களை பரிசீலிக்க வேண்டும் என்பது குறித்து சட்டத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது. சுமத்தப்பட்டுள்ள புகாரின் தன்மை, கிடைக்கும் தண்டனை, ஆதாரத்தை அழிக்கவோ, புகார்தாரர் அல்லது சாட்சிகளை மிரட்ட வாய்ப்பு உண்டா ஆகியவை குறித்தும் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More India News


அண்மைய செய்திகள்